‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்பு


‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்பு
x
தினத்தந்தி 5 May 2017 9:30 PM GMT (Updated: 5 May 2017 2:11 PM GMT)

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தமிழக சட்ட சபையில் ஒரு மசோதா எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், மற்றொரு மசோதா எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க, தமிழக சட்ட சபையில் ஒரு மசோதா எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், மற்றொரு மசோதா எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புக்கும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், இன்றுவரை ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்காக மத்திய அரசு துறைகள் பரிந்துரை செய்யவில்லை. எனவே, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்–2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா?, அல்லது ‘நீட்’ தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா? என்று தெரியாமல், மாணவர்களின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்போல இருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கமுடியாது என்று மத்திய மந்திரி நட்டா திட்டவட்டமாக அறிவித்தபிறகு, இன்னமும் தமிழக அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நாளை இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள், 103 மையங்களில் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 88 ஆயிரத்து 431 பேர் இந்த தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள மையங்களில் இந்தத்தேர்வை எழுதுகிறார்கள். தமிழக அரசு விலக்கு பெறுவதற்கு இன்னமும் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றிபெறுமா? என்பது சந்தேகம்தான். ஒருவேளை அதிசயமாக வெற்றிபெற்றால்கூட, இந்த ஓராண்டுக்கு மட்டுமே அந்த விலக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியும் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற பல தொழிற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கண்டிப்பாக ‘நீட்’ மூலமாகத்தான் நடக்கும். எனவே, ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யவேண்டியது பள்ளிக்கூட கல்வித்துறையின் இன்றியமையாத கடமையாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்–2 தேர்வின் அடிப்படையில்தான் நடந்தது என்பதால், 11–ம் வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுக்காமல், அல்லது அதில் அதிக அக்கறை காட்டாமல், பிளஸ்–2 பாடங்களை மட்டுமே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைப்பது பள்ளிக்கூடங்களில் நடைமுறையாக இருக்கிறது. மாணவர்களுக்கு பிளஸ்–2 பாடங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தான் தெரிகிறதே தவிர, அதைத்தாண்டி எதுவும் தெரிவதில்லை. அதனால்தான், பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள்கூட பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் முதல் ஆண்டிலேயே நிறைய பாடங்களில் தோல்வி அடைகிறார்கள். ‘நீட்’ தேர்வை எடுத்துக்கொண்டால், 11–ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, 11–ம் வகுப்பு பாடங்களை கண்டிப்பாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தாக வேண்டும். தமிழக அரசை பொறுத்தமட்டில், மத்திய கல்வித்திட்டத்திற்கு இணையாக, மாநில கல்வித்தரத்தை மாற்ற உடனடியாக உயர்தரத்தில் பாடத்திட்டங்களை மாற்றியாகவேண்டும். இந்த முயற்சியை ஏற்கனவே செய்திருந்தால், இந்த ஆண்டு முதல் பாடத்திட்டங்களை மாற்றியிருக்கலாம். ஆனால், இப்போது உடனடியாக பாடத்திட்டத்தை மாற்றப்போவதில்லை. எனவே, கல்வித் துறை 11–ம், 12–ம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டங்களாக இருந்தாலும், ‘நீட்’ தேர்வை எதிர்நோக்கும் வகையிலான பாடங்களையும் இணைத்து கற்றுக்கொடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் 11–ம் வகுப்பில் மாணவர்கள் சேரும் போது யார் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் கலந்து கொள்ளப்போகி றார்கள்? என்று கேட்டு அந்த மாணவர்களுக்கு மட்டும் தனியாக 11–ம் வகுப்பிலும், 12–ம் வகுப்பிலும் ‘நீட்’ தேர்வுக் காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி தயார்படுத்த வேண்டும். நல்ல பயிற்சிகளை கொடுத்தால் தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வை துணிச்சலுடன் எழுதி தேர்வு பெற்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Next Story