கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்தான் வேண்டும்


கடல்நீரை  குடிநீராக்கும்  திட்டங்கள்தான்  வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2017 9:30 PM GMT (Updated: 2017-05-16T19:04:06+05:30)

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப்போய்விட்டதால், தற்போது தமிழ்நாட்டிலுள்ள எந்த நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லை.

மிழ்நாட்டில் 140 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப்போய்விட்டதால், தற்போது தமிழ்நாட்டிலுள்ள எந்த நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் வெகு ஆழத்திற்கு போய்விட்டது. இதன்காரணமாக, நல்ல தண்ணீர் கிடைக்காமல், உப்புத்தண்ணீர் கிடைக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால், நிலத்தடி நீரும் கிடைக்காத அபாயகரமான நிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுவிடும். விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் செத்து மடிகின்றன.

இந்தியாவில் ‘தண்ணீர் மனிதன்’ என்று கூறப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரசிங், தமிழ்நாட்டிலுள்ள  நீர்நிலைகள்  எல்லாம் வறண்டுபோயிருக்கிறது. எல்லா இடத்திலும் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமான ஆழ்குழாய் கிணறுகளை தோண்டிக்கொண்டிருப்பதால் பூமிக்கடியிலுள்ள நீர் சுரண்டப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டி நீர் எடுத்துக்கொண்டிருப்பது, நிரந்தர சேமிப்பு கணக்கிலுள்ள பணத்தையெல்லாம் எடுத்து செலவழித்து கொண்டிருப்பதை போலாகும் என்றார். அடுத்த சில மாதங்கள் கழித்துத்தான் பருவமழை என்ற நிலையில், அதுவரை என்ன செய்யப்போகிறோம்? என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு, பேரிடியாக மற்றொரு செய்தி வந்துள்ளது. மத்திய அரசாங்க விவசாயத்துறை மந்திரி ராதாமோகன்சிங், அனைத்து மாநில முதல்–மந்திரிகளுக்கும், யூனியன் பிரதேச முதல்–மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘தென்மேற்கு பருவமழை மீண்டும் பொய்த்துப்போகும் பட்சத்தில், கடும் வறட்சியை சந்திக்கத்தயார் நடவடிக்கைகளை வகுத்து கொள்ளுங்கள். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை சமாளிக்க வறட்சி நிர்வாக மையங்களை அமைக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம், மாநில அரசுகளுக்கு கொடுக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியில் 25 சதவீத நிதியைக்கொண்டு இதுபோன்ற வறட்சி இடர்பாட்டை சமாளிக்க வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார். இனியும் பருவமழை பொய்த்தால், தமிழ்நாடு தாங்காது. எனவே, போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசு 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோர பகுதிகள் அனைத்திலும் ஆங்காங்கே கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.

இஸ்ரேல் நாடு உலகத்தில் வறட்சி மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். ஆனால், இந்த நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் ஏராளமாக அமைத்திருப்பதன் மூலமும், கொஞ்சம்–கொஞ்சம் பெய்யும் மழைநீரையும் சேகரித்து வைப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும், அவர்களுக்கு தேவையான அளவு தண்ணீருக்குமேல் அபரிமிதமான தண்ணீரை வைத்துக்கொண்டு, விவசாயத்திலும் உலகம் முழுவதையும் தன்னை நோக்கி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களிலுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக கிடைக்கும் தண்ணீர்தான் பலபகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இருநிலையங்களிலும் தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் (1 மில்லியன் என்பது 10 லட்சம்) உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நெம்மேலியில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கி சப்ளை செய்யும் வகையிலான மேலும் ஒரு திட்டம் ரூ.1,350 கோடியில் செயல்படுத்த டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், நெம்மேலி குப்பம் கிராமத்தில் மேலும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் தொடங்குவதற்காகவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத்திட்டங்கள் மட்டுமல்லாமல், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மேலும் பிரமாண்டமான வகையில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் தொடங்கும் முயற்சிகளை தமிழக அரசு தொடங்கவேண்டும். மத்திய அரசாங்கத்திலும் இதற்கான நிதியை கேட்டுப்பெறவேண்டும். அதுபோல, ஜப்பான் நாட்டு நிதிநிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, உலகவங்கி போன்ற பல்வேறு நிதிநிறுவனங்களின் கதவுகளைத்தட்டி, ஏராளமான நிதியை பெற்று கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை தொடங்குவதையே முதல் முயற்சியாக தமிழக அரசு மேற்கொண்டால்தான், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.

Next Story