விவசாயிகள் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு


விவசாயிகள் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு
x
தினத்தந்தி 26 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-26T18:25:31+05:30)

விவசாய நிலங்கள் என்பது இயற்கைத்தாயின் கோவில்கள். அந்தக் கோவில்களில் வழிபாடு நடத்தப் படுவது என்பது அங்கு பயிர்சாகுபடி செய்யும் காலங்களில் தான்.

விவசாய நிலங்கள் என்பது இயற்கைத்தாயின் கோவில்கள். அந்தக் கோவில்களில் வழிபாடு நடத்தப் படுவது என்பது அங்கு பயிர்சாகுபடி செய்யும் காலங்களில் தான். தற்போது அந்தக்கோவில்களில் வறட்சியின் காரண மாக பூஜைகள் நடக்காமல் மட்டும் இருப்பதல்ல. தீபங்கள் கூட ஏற்றி வைக்க முடியாத நிலையில், கடும்வறட்சி தமிழ் நாட்டில் வாட்டிக் கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கு மட்டு மல்ல, குடிநீருக்கும் மாநிலம் முழுவதும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடிநீரும் பல இடங்களில் வற்றிப்போய்விட்டது. எந்த இடத்திலும் பசுமையை காண முடியவில்லை. தமிழக அரசு வறட்சி நிவாரணத்திற்காக ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிவாரணம் தாருங்கள் என்று மத்திய அரசாங்கத்தை பார்த்து கையேந்திக் கொண்டி ருக்கிறது.

டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயக்கடன்களை ரத்துசெய்ய வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, ‘வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போது மத்திய அரசாங்கம் வெறுமனே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. வரலாறு காணாத வறட்சியால் தமிழக விவசாயிகள் பாதிக்கப் பட்டிருக்கும்போது மத்திய அரசாங்கம், தமிழக அரசுக்கு உதவ முன்வரவேண்டும். இந்தநேரத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிதிச்சுமை முழுவதையும் தமிழக அரசு தோளில் சுமத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டோ இதற்கு நேர் எதிரானவகையில் கருத்துகளை தெரிவித் துள்ளது. ‘தமிழக அரசு என்னசெய்கிறது? என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கடுமையான கண்டனக் கணைகளை வீசி யிருக்கிறது. விவசாயிகள் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘தமிழகத்தில் கடுமையான பஞ்சத்தினாலும், கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயிகளின் பாதுகாவலன் தமிழக அரசு தான். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்புதான். இதைச்செய்யாமல், தமிழக அரசு மவுனமாக இருப்பது சரியான பதிலல்ல. விவசாயிகள் நலத்திட்டத்திற்காக போதிய நிதி இல்லை. மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி தரவில்லை என்றும், அதற்காக மத்தியஅரசின் மீது பழிபோடுவதையும் ஏற்கமுடியாது. விவசாயிகளை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமை. இதற்கான நிதியை மாநில அரசுதான் திரட்டவேண்டும். விவசாயிகளுக்கு உதவும் விதமாக தமிழக அரசு திட்டங்களை வகுத்து, அதை எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் கண்ணீரை மத்திய அரசாங்கம்தான் துடைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டும், மாநில அரசுதான் துடைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் சொல்கிறது. ஆனால், அழுதுகொண்டிருக்கும் விவசாயி களோ, ‘மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் சேர்ந்துதான் தங்கள் துயர்களை துடைக்கவேண்டும்’ என்று எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழையும், வறட்சியும் மாறி மாறி வரும்நிலையில், ஆண்டுதோறும் இப்படி விவசாயிகள் கையேந்துவதை தவிர்க்கும் வகை யிலான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதற்கு விவசாயிகள் எதிர்பார்ப்பது தற்காலிக நிவாரணம் அல்ல. ஒரு நிரந்தர தீர்வு. அந்தவகையில், விவசாயிகளின் பிரச்சினைக்கு எல்லாம் ஒரு நிரந்தர தீர்வு காணும்வகையில், முதலில் நல்ல ‘நீர் மேலாண்மை’ திட்டங்களை வகுக்க வேண்டும். அடுத்து விவசாய தொழிலை லாபகரமானதாக ஆக்கவேண்டும். இதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அரசுக்கு அறிவித்த கருத்துகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவதுதான் சிறந்த வழியாகும். ‘‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்’’ என்ற பிரதமர் நரேந்திரமோடியின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், முதலில் மழை காலங்களில் பெய்யும் மழைநீரை ஒரு சொட்டுக்கூட வீணாக கடலில் கலக்காமல் சேமித்து வைக்கும் திட்டங் களை நிறைவேற்ற வேண்டும். இதோடு மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரப்படுத்தவேண்டும். அடுத்து விவசாயி களின் உற்பத்திச்செலவைவிட, 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விளைபொருட் களுக்கும் நிர்ணயித்து அரசாங்கமே கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி அவற்றை வாங்க வேண்டும்.

Next Story