ஆன்–லைனில் விளைபொருட்கள் விற்பனை


ஆன்–லைனில் விளைபொருட்கள்  விற்பனை
x
தினத்தந்தி 21 Jun 2017 8:30 PM GMT (Updated: 2017-06-21T17:59:52+05:30)

ஆண்டாண்டு காலமாக வாய்மூடி மவுனியாக இருந்த விவசாயிகள், இப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வீதிக்கு வந்து போராடத் தொடங்கி விட்டார்கள்.

ண்டாண்டு காலமாக வாய்மூடி மவுனியாக இருந்த விவசாயிகள், இப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வீதிக்கு வந்து போராடத் தொடங்கி விட்டார்கள். இவ்வளவு நாட்களும் விவசாயத்தில், இடுபொருட்களின் விலையெல்லாம் உயர்ந்து, தாங்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி நலிந்தநிலையில் உள்ள விவசாயிகள், இப்போது தங்கள் கோரிக்கைகளை உரத்த குரலில் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கமும் விவசாயிகளின் ஒற்றுமையான குரலைக் கண்டு, குறைந்த வட்டிக்கு பயிர்க்கடன்கள் தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பல மாநிலங்களில் தனித்தனியாக போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த விவசாய சங்கங்கள் எல்லாம், சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் கூடி, ஒரே அமைப்பாக போராட முடிவு எடுத்து விட்டனர். நாடு முழுவதிலும் இருந்து 130 விவசாய சங்கங்கள், ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு’ என்ற பெயரில் ஒரே அமைப்பாக ஒரே குடையின்கீழ் செயல்பட முடிவெடுத்து விட்டனர்.

எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவர்களே விலைநிர்ணயம் செய்யும் உரிமையை பெற்றிருக்கும்போது, விவசாயி மட்டும் தன் விளைபொருளுக்கு தானே விலைநிர்ணயம் செய்யமுடியாமல், சந்தையில் வியாபாரிகள் என்ன விலைக்கு வாங்குகிறார்களோ?, அந்த விலைக்குதான் விற்கவேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருக்கிறார்கள். இந்தநிலையை போக்கத்தான் 2007–ம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைந்த தேசிய விவசாயிகள் கொள்கை அறிக்கையில், ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுக்குமேல், 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த பரிந்துரையை மத்திய–மாநில அரசாங்கங்கள் நிறைவேற்றியிருந்தால், விவசாயிகளுக்கு இவ்வளவு இன்னல்கள் நேரிட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது என்பதை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 2 நாட்கள் நடந்த ‘நெல் திருவிழா’வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் விவசாயம் செய்ய முன்வந்துக்கொண்டிருக்கும் மிக நல்ல சூழ்நிலையில், இயற்கை வேளாண்மையை விவசாயிகள் மேற்கொள்ளவேண்டும். அதிக உரம், அதிக தண்ணீர் தேவைப்படாத பல நெல் ரகங்களை நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்கள் என்பதை இந்த ‘நெல் திருவிழா’ மிகத் தெள்ளத்தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.

இந்தவிழாவில் பேசிய தமிழக அரசு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி, ஒரு சிறப்பான அறிவிப்பை விவசாயிகள் மனம் குளிரும்வகையில் வெளியிட்டுள்ளார். உணவுப்பொருள் வழங்கல்துறை, வேளாண்மைத்துறையுடன் இணைந்து ரே‌ஷன்கடை ஊழியர்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த விளைபொருட்களை விற்க ‘ஆன்–லைன்’ சந்தையை ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியை விரைவில் தொடங்க அரசு பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது என்று அறிவித்துள்ளார். இது நிச்சயமாக வரவேற்புக்குரியது. விவசாயிகள் ‘ஆன்–லைன்’ சந்தை மூலம் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வசதிகள் செய்துகொடுத்தால், தங்களிடம் உள்ள பொருட்கள் என்னென்ன, அதற்கு யார் என்ன விலைகொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள் என்பதை ‘ஆன்–லைன்’ மூலமாக தகவல்களை திரட்டிக்கொள்ளலாம். யார் அதிக விலைகொடுத்து வாங்க முன்வருகிறார்களோ?, அவர்களுக்கு விற்பனை செய்யவும், இந்த வசதியானது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுபோல, வியாபாரிகளுக்கும் இந்த ‘ஆன்–லைன்’ சந்தை மூலம், யாரிடம் தாங்கள் தேடும் விளைபொருட்கள் இருக்கிறது?, என்ன விலை என்பதையும் அறிந்துகொள்ளமுடியும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், எல்லோரிடமும் செல்போன் வசதியிருக்கும் நிலையில், நிச்சயமாக இந்த ‘ஆன்–லைன்’ மூலம் மேற்கொள்ளப்படப்போகும் விற்பனை, வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

Next Story