மோடியின் 5–வது அமெரிக்க பயணம்


மோடியின்  5–வது  அமெரிக்க  பயணம்
x
தினத்தந்தி 28 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-28T18:59:33+05:30)

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, அவருக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் இருந்த நிலை இருந்தது.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, அவருக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் இருந்த நிலை இருந்தது. அவருக்கு அமெரிக்க விசா கூட வழங்க மறுக்கப்பட்டது. ஆனால், பிரதமரான பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 2014–ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து நான்கு முறை அமெரிக்கா சென்றிருக்கிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் ஏதாவது ஒருவகையில் சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது. சுற்றுப்பயணத்தின் இறுதியில் பயனுள்ள பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த சுற்றுப்பயணத்தின் விளைவாகத்தான் 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில், அப்போதைய ஜனாதிபதி ஒபாமா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரை பெற்றார். இப்போது, டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு, இந்தியாவுக்கும், அவருக்கும் உறவு எப்படி இருக்கும்? என்று எல்லோரும் சந்தேகப்பட்டனர். ஆனால், 5–வது முறையாக நரேந்திரமோடி இப்போது அமெரிக்காவுக்கு சென்றது இந்த நட்புறவை மேலும் தழைக்க வைக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.

இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற நரேந்திரமோடியை, டிரம்ப் தனது அதிகாரபூர்வ  டுவிட்டரில், தனது ‘‘உண்மையான நண்பர்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது பயணத்தில் அமெரிக்காவில் உள்ள மிகமுக்கியமான தொழில்அதிபர்களை மோடி சந்தித்து பேசினார். இதுவரையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 45 உலகத்தலைவர்கள் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் இல்லாத வகையில், வெள்ளை மாளிகையில் மோடிக்கு ஒரு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. தனக்கு இந்த விருந்தை அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் நன்றி தெரிவித்த மோடி, இந்த வரவேற்பு இந்தியாவில் உள்ள 124 கோடி மக்களுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு என்று மனம் நெகிழ்ந்து கூறினார். இந்த சந்திப்பு உலக நாடுகளையே உற்றுப்பார்க்க வைத்தது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடவேண்டும் என்று மோடியும்– டிரம்ப்பும் உறுதியான குரலில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறினர். மும்பை மற்றும் பதான்கோட்டில் நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட சதிகாரர்கள் மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்துகொண்டு, இந்தியாவில் தாக்குதல் நடத்தும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை நீதியின் முன்நிறுத்துமாறு இருவரும் சேர்ந்து கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், ஆளில்லாத குட்டி விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், சி–17 ரக விமானங்கள் போன்றவற்றை வாங்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா வகையிலும் பயனுள்ள இந்த பேச்சுவார்த்தையில், ‘எச்–1 பி’ விசா பற்றி மட்டும் பேசப்படாதது நிச்சயமாக ஒரு குறையாக இருக்கிறது. ஏனெனில், ‘எச்–1 பி’ விசா மூலம்தான் இந்தியாவில் செயல்படும் பல ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இந்திய பணியாளர்களை அதிகளவில் அனுப்பிவருகின்றது. டிரம்ப் பதவிக்கு வந்தபிறகு, ‘எச்–1 பி’ விசாவிற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விசா வி‌ஷயத்தில் மோடி அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிச்சயமாக இந்த சந்திப்பின் போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததிற்கும் மேலாக, இந்த பிரச்சினை குறித்து அவர்கள் பேசவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. இப்போது பேசாவிட்டாலும், மோடியும், டிரம்பும் எடுத்த முடிவின்படி, நடக்க இருக்கும் பரஸ்பர வர்த்தக உறவுகள் ஆய்வு கூட்டங்களில் இந்த பிரச்சினை குறித்து விவாதித்து நல்ல தீர்வு காணவேண்டும்.

Next Story