உடனடி தேவை நதிநீர் இணைப்பு


உடனடி தேவை  நதிநீர்  இணைப்பு
x
தினத்தந்தி 4 July 2017 9:30 PM GMT (Updated: 4 July 2017 6:11 PM GMT)

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல ஆண்டுகளாகவே விவசாயிகளின் வாழ்வில் வளம் சேரவேண்டுமென்றால், விவசாயம் செழிக்கவேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல ஆண்டுகளாகவே விவசாயிகளின் வாழ்வில் வளம் சேரவேண்டுமென்றால், விவசாயம் செழிக்கவேண்டும். அதற்கு நதிநீர் இணைப்புதான் வழி என்று வலியுறுத்தி வருகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் எப்போதும், ‘‘கங்கை இங்கே வரவேண்டும், வங்க கடலை தொடவேண்டும்’’  என்று  முழங்குவார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயம், அதுதான் நிரந்தர தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக நதிநீர் இணைப்பு திட்டங்களையும் அதிவேகமாக நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். இதேபோல, நடிகர் ரஜினிகாந்தும் தன்னை சந்திக்க வந்த விவசாய சங்கத்தினரிடம், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி நதிகள் இணைக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், நேத்ராவதி நதியையும் காவிரியோடு இணைக்கவேண்டும் என்று கூறியதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

2002–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13–ந் தேதி காவிரி பிரச்சினைக்காக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தநேரத்தில், இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணவேண்டுமென்றால், ‘‘கங்கை, காவிரி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தி இந்திய மக்களுக்கு ஒரு பொற்காலத்தை கொண்டுவரவேண்டும். அப்படி கங்கை நதியை இணைக்கமுடியாவிட்டால், குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்கவேண்டும். எவ்வளவு பணம் என்று கவலைப்படாதீர்கள். நாளைக்கே அறிவித்தால் நாளையே ரூ.1 கோடி தருகிறேன். பணத்தை பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படவேண்டாம். பணம் வேண்டுமென்றால், மக்களிடம், எங்களிடம் விடுங்கள், பார்த்துக்கொள்கிறோம்’’ என்று அறிவித்தார். 15 ஆண்டுகளுக்குப்பிறகு, இப்போது விவசாய சங்க பிரதிநிதிகளிடம் நதிகள் இணைப்புக்கு தருவதாக சொன்ன ரூ.1 கோடியை இப்போதே தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

நதிகளை இணைக்கும் திட்டத்தை 2002–ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து, இதற்காக செயல்திட்டக்குழுவையும் அமைத்தார். அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும். நதிகளை இணைக்கும் திட்டம் வாஜ்பாயின் கனவுத்திட்டம் என்ற வகையிலும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வில் வளம்சேர்க்கும், விவசாயம் தழைக்கும் என்ற வகையிலும் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், ரஜினிகாந்த், குமரி அனந்தன் ஆகியோர் வேண்டுகோளை ஏற்று, பிரதமர் உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும். இதில் தமிழக அரசின் முயற்சியும் இருக்கிறது. தமிழக நதிகளை இணைத்தாலே ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும், அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜும் 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளனர். தமிழக நதிநீர் இணைப்பை 5 கட்டங்களாக நிறைவேற்றமுடியும். முதல்கட்டமாக, மேட்டூரையும்– வைகையையும், இரண்டாம் கட்டமாக மேட்டூரையும்– பாலாறையும், மூன்றாம் கட்டமாக வைகையையும்–தாமிரபரணியையும், நான்காம் கட்டமாக தாமிரபரணியையும்–பெருஞ்சாணியையும், ஐந்தாம் கட்டமாக சமகாலத்தில் ஆறுகளையும், ஏரி, துணை ஆறுகளையும் ஆங்காங்கே இணைக்கவேண்டும். இதை 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றமுடியும் என்பது அவர்கள் ஆலோசனை. இப்போது இந்தத்திட்டத்தை நிறைவேற்ற ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்கிறார் பொன்ராஜ். இதை நிறைவேற்றுவதற்கு வேறெங்கும் போகவேண்டியதில்லை. தமிழக அரசுதான் நிறைவேற்றவேண்டும். உடனடியாக இந்தத்திட்டத்தை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு, செயல்திட்ட உயர்மட்டக்குழுவை அமைக்கவேண்டும். ரஜினிகாந்த் கொடுக்கும் ரூ.1 கோடியை பெற்றுக்கொண்டு, உலக வங்கி, ஆசிய வங்கி, மத்திய அரசாங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதி திரட்டலாம். விவசாயிகளின் உடனடி தேவை இந்திய, தென்னிந்திய, தமிழக நதிநீர் இணைப்புத்தான். முதல் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கலாமே.

Next Story