வசதி உள்ளவர்களுக்கு மானியம் எதற்கு?


வசதி உள்ளவர்களுக்கு மானியம் எதற்கு?
x
தினத்தந்தி 9 July 2017 9:34 PM GMT (Updated: 9 July 2017 9:34 PM GMT)

இப்போது ரெயில் டிக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு வாசகம் பயணிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

“உங்கள் ரெயில் கட்டணத்தில் 43 சதவீதத்தொகை இந்த நாட்டின் சாதாரண குடிமக்களால் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரெயில் பயணிகள் அனைவருக்கும் தெரியவேண்டுமென்றால், தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டிருக்கவேண்டும். நிச்சயமாக இது எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒன்றாகும். இந்தியா முழுவதும் போக்குவரத்தை பொறுத்தமட்டில், நாடி நரம்பாக செயல்படுவது ரெயில்வேத்துறைதான். 12 ஆயிரத்து 617 ரெயில்கள், தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு 7,172 ரெயில்நிலையங்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த பயணிகளில் ஒரு கணிசமான அளவு இலவச பாஸ்கள் மூலமாகவும், கட்டணச்சலுகை மூலமாகவும் சென்றுகொண்டிருக்கிறார்கள். மேலும், ரெயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், ரெயில்வேத்துறை ஈட்டவேண்டிய அளவுக்கு வருமானத்தை ஈட்டவில்லை.

ஒரு பயணிக்கு ஆகும் செலவில் 57 சதவீத தொகையைத்தான் அவர் கட்டணமாக தருகிறார். மீதி 43 சதவீதம் மானியமாகத்தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. ரெயில்வேத்துறை லாபத்தில் ஓடினால்தான் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய வசதிகளை செய்யமுடியும். புதிய ரெயில்களை ஓட்டமுடியும். புதிய திட்டங்களை நிறைவேற்றமுடியும். எனவே, கட்டண சீர்திருத்த நடவடிக்கைகளில் ரெயில்வேத்துறை இறங்கியுள்ளது. எப்படி சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தொகையை வசதிபடைத்தவர்கள் தாங்களாகவே எங்களுக்கு மானியம் வேண்டாம், நாங்கள் முழுத்தொகையையும் கட்டிவிடுகிறோம் என்று சொல்லும்வகையில், ‘கிவ் இட் அப்’ அதாவது, ‘விட்டுக்கொடுத்துவிடுங்கள்’ என்று ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதோ, அதுபோல ரெயில்வேயிலும் கட்டணச்சலுகை வேண்டாம் என்று சொல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து விட்டுக்கொடுக்க வகைசெய்யும் வகையில், ஒரு திட்டத்தை செயல்படுத்த ரெயில்வேத்துறை முடிவு எடுத்துள்ளது. முதல்கட்டமாக, ‘எங்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 50 சதவீதத்தை கொடுத்துவிடுகிறோம் அல்லது 100 சதவீதத்தையும் கொடுத்துவிடுகிறோம்’ என்று சொல்லும்வகையில், ஏதாவது ஒன்றை அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்யும்வகையில், இந்த திட்டம் நிறைவேற இருக்கிறது.

பொதுமக்களுக்கு, அவர்கள் தங்கள் பயணத்துக்குரிய முழுக்கட்டணத்தையும் கொடுக்கவில்லை என்பதை நன்றாக தெரியப்படுத்திவிட்டால், இந்த திட்டத்தை நிறைவேற்ற நிச்சயமாக நிறையபேர் முன்வருவார்கள். ஆனால், இவ்வாறு முழுத்தொகையையும் கொடுத்து டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகையை ரெயில்வேத்துறை வழங்கவேண்டும். ரிசர்வேஷன் செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் அல்லது இவ்வாறு முழுத்தொகையையும் செலுத்துபவர்களுக்கு என ரெயில் பெட்டிகளில் தனியாக சில இடங்களை ஒதுக்கலாம். 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரதமர் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தொகை வேண்டாம் என்று ஒப்படைக்க விரும்புகிறவர்கள் விட்டுக்கொடுத்துவிடலாம் என்றும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் உள்ளவர்கள் என்ற வகையில் வருமானவரி கட்டுபவர்களுக்கு மானியத்தொகையை ரத்து செய்யவும் பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு, ஒரு கோடி பேர்களுக்குமேல் இப்போது மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி மானியத்திலும், தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.72 ஆயிரத்து 614 கோடியிலும் இதுபோல ‘மானியம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள் விட்டுக்கொடுக்கும் வகையிலும், வசதிபடைத்தவர்களுக்கு மானியம் செல்லாதவகையிலும் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். மானியம் வாங்குவது சுயகவுரவத்துக்கு இழுக்கு, மானியம் வேண்டாம் என்பது தங்களுக்கு பெருமை என்ற உணர்வை வசதிபடைத்தவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு கிடைக்கும் தொகையை தொழில்வளர்ச்சி போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிறைவேற்றலாமே!.


Next Story