இனி செல்லாது என்றால் தாங்காது


இனி  செல்லாது  என்றால்  தாங்காது
x
தினத்தந்தி 1 Aug 2017 9:30 PM GMT (Updated: 2017-08-01T23:00:04+05:30)

சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளிவருகின்றன. அதில், சில செய்திகள் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. சில செய்திகள் முன்கூட்டியே தரும் தகவல்களாகவும் அமைந்துவிடுகின்றன.

மூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளிவருகின்றன. அதில், சில செய்திகள் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. சில செய்திகள் முன்கூட்டியே தரும் தகவல்களாகவும் அமைந்துவிடுகின்றன. அந்தவகையில், கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ‘வாட்ஸ்– அப்’ செய்திகளாக விரைவில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் என தகவல் பரப்பப்பட்டன. அந்தநேரத்தில் இந்த செய்தியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த ‘வாட்ஸ்–அப்’ செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 8–ந் தேதி, பிரதமர் திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ரூ.2 லட்சத்துக்குமேல் பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள், வருமான வரித்துறை நடவடிக்கையில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொதுமக்கள் குறிப்பாக, விவசாயிகள், வியாபாரிகள் பெரும் இன்னலுக்குள்ளானார்கள்.

இந்தநிலையில், திடீரென மீண்டும் அதேபோல், ‘வாட்ஸ்–அப்’ செய்திகளில் 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று விரைவில் அறிவிக்கப்படப்போகிறது என்ற தகவல்கள் உலாவருவது, மக்களிடையே பெரியகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பே 2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது என்று ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. ஆனால், அதற்கு பதிலாக, இந்த மாதம் வெளியிட புதிதாக 200 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. டெல்லி மேல்–சபையில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் இந்த பிரச்சினையை கிளப்பி, ‘ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கப்போகிறது என்ற தகவல் வேகமாக பரவிவருகிறதே’ என்று கேட்டார். ஆனால், அந்தநேரம் அவையில் இருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, இதுகுறித்து எந்தப்பதிலும் சொல்லவில்லை. இது பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. வடமாநிலங்களில் பல இடங்களில் இப்போதே 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு பொதுமக்களும் மறுக்கிறார்கள், வியாபாரிகளும் மறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருபக்கம் மத்திய நிதி மந்திரி பதில் சொல்லாமல் மவுனம் காட்டும்நிலையில், நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுபற்றி எந்த செய்தியும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை நிறுத்திவைத்திருப்பது தனி விவகாரம். அதை ரிசர்வ் வங்கிதான் உறுதிப்படுத்தவேண்டும். 2,000 ரூபாய் நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி தகவல் தெரிவிக்கும் என்று கூறியிருக்கிறார்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தால், நிச்சயமாக அது பொதுமக்களிடையே பெரியபாதிப்பை ஏற்படுத்தும். 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கத்தை குறைக்க, புதிய நோட்டுகள் அச்சடிப்பது தவறில்லை. ஆனால், புழக்கத்தில் வந்து ஒருசில மாதங்களுக்குள் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தால், எந்த நேரத்தில், எந்த நோட்டு செல்லாது என்று குறிப்பாக, உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில், மக்கள் எல்லாம் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளையே நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டு, குழப்பம் உருவாகிவிடும். வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான மத்திய அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கையால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே, இதில், உறுதியான பதிலை உடனடியாக மத்திய நிதி மந்திரியும், ரிசர்வ் வங்கியும் அறிவிக்கவேண்டும்.

Next Story