லஞ்சம் இல்லாத தமிழ்நாடு


லஞ்சம்  இல்லாத  தமிழ்நாடு
x
தினத்தந்தி 3 Aug 2017 9:30 PM GMT (Updated: 3 Aug 2017 1:40 PM GMT)

தமிழ்நாட்டில் எளிதில் தொழில் தொடங்கி நடத்த முடியும் என்ற நிலையை பல காரணங்கள் முடக்கிவிட்டன.

மிழ்நாடு பெருமைமிகு தமிழ்நாடு என்ற பெயரை அடைய வேண்டும் என்றால், அரசு நிர்வாகம் தூய்மையாக இருக்க வேண்டும், வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டும், திறமை மிளிர செயல்பட வேண்டும், லஞ்சம் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கும் அடிப்படை தேவைகள், வசதிகள், லஞ்சமில்லாமல் கிடைத்தால் வாழ்க்கை சக்கரம் எளிதாக சுழலமுடியும். ஆனால் எங்கும் எதிலும் லஞ்சம் தலைவிரித்தாடினால் நிர்வாகம் சீர்கெட்டுப்போய் வளர்ச்சிகளெல்லாம் முடங்கிப்போய்விடும். மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகள் தங்கு தடையின்றி கிடைக்காது.

தமிழ்நாட்டில் எளிதில் தொழில் தொடங்கி நடத்த முடியும் என்ற நிலையை பல காரணங்கள் முடக்கிவிட்டன. புதிய தொழில்களை பெறுவதற்காக அனுமதிகள், ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் தொழில்களுக்கு வழக்கமாக நடைமுறையில் உள்ள ஒப்புதல்கள் வழங்குவதில் தேவையில்லாமல் பல தாமதங்கள் இருப்பது தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக தொழில் அதிபர்களில் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் சுற்றுசூழல் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதியை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் மாற்றிவிட்டது. ஆந்திராவில் உள்ள தொழில் அதிபர்கள் இந்த 5 ஆண்டு ஒப்புதலை மின்னஞ்சல் அதாவது, இ–மெயிலிலேயே கேட்டு பெற்று விடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல கட்டங்களுக்கு சென்று, ஒப்புதலை பெறுவதற்கான செலவும் மிகவும் அதிகமாகிறது என்பது தொழில் அதிபர்களின் கவலையாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேவையில்லாமல் தொழில் நிறுவனங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்ற குறைபாடுகள் இருக்கின்றன.

பான்மசாலா, குட்கா விற்பனை தமிழ்நாடு முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை, இந்த உத்தரவெல்லாம் ஏட்டளவில்தான் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் இல்லை என்பது எல்லோருக்கும் நன்றாகத்தெரியும். எந்த ஊரில், ஏன் குக்கிராமத்தில்கூட தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா எல்லாம் தாராளமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துபவர்கள் கூட எந்தவித அச்சமும் இல்லாமல், வெற்றிலை–பாக்கு போடுவதுபோல வெளிப்படையாகவே மென்றுகொண்டிருக்கிறார்கள். பான்மசாலா, குட்கா பயன்பாடு புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது என்று எவ்வளவோ அபாய எச்சரிக்கைகள் வந்தாலும், தாராளமாக கிடைப்பதால் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. ஒரு குட்கா வியாபாரியிடம் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், பல தகவல்கள் வெளி வந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், அரசு பணி நியமனங்கள், இடமாறுதல்களில் பணம் வாங்காமல், தகுதி அடிப்படையில் செய்தால் அரசு ஊழியர்களிடையேயும் ஒரு உற்சாகம் பிறக்கும். லஞ்சம் கொடுக்காமல் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் லஞ்சம் வாங்காமல் கை சுத்தத்துடன் தங்கள் பணிகளை ஆற்றுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசில் உள்ள பணியாளர்களுக்கு பணித்திறமை குறித்து இந்தியா முழுவதும் போற்றி பாராட்டும் வகையிலான நற்பெயர் இருந்தது. தமிழக போலீசார், ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையான போலீசாராக கருதப்பட்டனர். காரணம், அந்தகாலங்களில் எந்த பணி நியமனம் என்றாலும், தேர்வில் அவர்களது திறமைதான் கணக்கிடப்பட்டதே தவிர, வேறுமுறைகேடுகளுக்கு எள்ளளவும் இடமில்லாமல் இருந்தது. அத்தகைய திறமைமிக்கவர்கள் எந்த தவறுக்கும் இடம்தராமல் நீதிவழுவாமல் பணியாற்றியதால் நிர்வாகம் எல்லோரும் மெச்சும்படியாக இருந்தது. எந்த பதவியில் உள்ள அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினாலும் தயவு தாட்சண்யம் கூடாது என்று 2012–ல் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. எனவே, தமிழக அரசின் அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழல் வேரோடு களையெடுக்கப்படவேண்டும். இதுதொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படவேண்டும். லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதுபோல, கொடுப்பதும் கொடிய குற்றம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையேயும் ஏற்படுத்த வேண்டும்.

Next Story