இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் அட்டை


இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் அட்டை
x
தினத்தந்தி 7 Aug 2017 9:30 PM GMT (Updated: 7 Aug 2017 5:03 PM GMT)

இந்தியா முழுமைக்கும் அனைத்து மக்களுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

ந்தியா முழுமைக்கும் அனைத்து மக்களுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு அனைத்து சேவைகளுக்கும் இப்போது ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாகிவிட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு போய்ச்சேர இந்த ஆதார் அட்டை நிச்சயமாக பெரும் பங்காற்றுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் நடக்காது என்றநிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30–ந்தேதி கணக்குப்படி, இந்தியாவில் 83 சதவீதம் பேர்களுக்குமேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சற்று மந்தமாக இருப்பது தெரிந்தது. 85 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஆதார் அட்டை வழங்கப்பட்டநிலை இருந்தது. இப்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கும்பணி விரைவில் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்பத்திரியிலும், வீடுகளிலும் பிறந்த குழந்தைக்கு கருவிழியையும், விரல் ரேகைகளையும் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கிவிடுவதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை கண்டிப்பாக வேண்டும் என்றநிலை இருக்கும்நிலையில், இப்போது ஒருவர் இறந்த பிறகுகூட ஆதார் அட்டை தேவைப்படும் என்ற அவசியத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கிவிட்டது. சிலநேரம் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இறப்பு சான்றிதழை வாங்கி, போலி வாரிசு சான்றிதழையும் வாங்கி அவரது சொத்துக்களை கபளிகரம் செய்யும் நிலைமை நாட்டில் பெருகிவருகிறது. இதைத்தடுக்க இறப்பு சான்றிதழ் கோரும் அவரது வாரிசுதாரர் தன்னுடைய ஆதார் எண் தன்னுடைய மனைவி அல்லது பெற்றோர் ஆதார் எண் மட்டுமல்லாமல், இறந்தவரின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இது அக்டோபர் 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு இது நிச்சயம் அவசியம் என்றும், இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆதார் மட்டும் போதும் என்றவகையில், மேலும் பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இறந்தவரின் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பம் செய்யும் போது, அவருக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பம் செய்கிறவர்கள் தங்களுக்கு தெரிந்தவரை இறந்தவருக்கு ஆதார் எண் இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இதில் ஏதாவது தவறு இழைக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதார் எண் இருந்து, விண்ணப்பம் செய்கிறவர்கள் அவருக்கு ஆதார் எண் இல்லையென்று தெரிவித்தது மோசடி அல்லது தவறு என்று தெரிந்தால் ஆதார் சட்டம் மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின்படி ஒரு குற்றமாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து பத்திரிகை தகவல் அலுவலகம் ‘டுவிட்டரில்’ இது கட்டாயமல்ல என்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்த ஒரு முடிவு. ஆதார் அட்டை வாங்கியிருக்காதவர்களின் குடும்பங்களெல்லாம் என்ன செய்வார்கள்? எனவே தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீதம் எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கிய பிறகும், பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை எளிதாக்கிய பிறகுமே இதுபோல ஆதார் அட்டை கட்டாயம் என்று அனைத்து சேவைகளுக்கும் கொண்டு வரவேண்டும். அதுவரையில் ஆதார் எண்ணை குறிப்பிடுவது விருப்பத்தின் அடிப்படையில் என்று தான் இருக்கலாமே தவிர, அது இல்லாமல் முடியாது என்ற நிலைவேண்டாம்.

Next Story