கடமைகள் காத்திருக்கின்றன...


கடமைகள்  காத்திருக்கின்றன...
x
தினத்தந்தி 21 Aug 2017 9:30 PM GMT (Updated: 21 Aug 2017 5:51 PM GMT)

இந்திய அரசியலில் எங்குமே இல்லாத ஒரு தனிச்சிறப்பு அ.இ.அ.தி.மு.க.வுக்கு உண்டு. ‘உடைந்த கண்ணாடி எப்போதுமே ஒன்று சேராது’ என்பார்கள். அதுதான் பல அரசியல் கட்சிகள் பிளவுப்பட்ட நேரத்தில் பிரிந்தது, பிரிந்ததுதான்.

ந்திய அரசியலில் எங்குமே இல்லாத ஒரு தனிச்சிறப்பு அ.இ.அ.தி.மு.க.வுக்கு உண்டு. ‘உடைந்த கண்ணாடி எப்போதுமே ஒன்று சேராது’ என்பார்கள். அதுதான் பல அரசியல் கட்சிகள் பிளவுப்பட்ட நேரத்தில் பிரிந்தது, பிரிந்ததுதான். இனி எப்போதும் ஒன்றுசேராது என்றவகையில், பிரிந்தவையாகவே இருந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி பிரிந்தது, கம்யூனிஸ்டு கட்சி பிரிந்தது, ஜனதா கட்சி பிரிந்தது. எந்த கட்சியும் மீண்டும் ஒன்றாக இணைந்ததில்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிட கழகம்தான், திராவிட கழகங்களின் தாய் கட்சியாக இருக்கிறது. திராவிட கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா பிரிந்தபிறகுதான் தி.மு.கழகத்தை உருவாக்கினார். 1972–ல் தி.மு.க.வைவிட்டு வெளியே வந்த மறைந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். இதுபோல, வைகோ பிரிந்து ம.தி.மு.க.வை உருவாக்கினார். தி.மு.க.வில் இருந்து பிரிந்துசென்ற அ.தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ மீண்டும் தி.மு.க.வுடன் இணையவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று 2 அணிகளாக பிரிந்து ஒரு தேர்தலை சந்தித்தபிறகு, இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இதேபோல, ஜெயலலிதா மறைந்தவுடன், அ.தி.மு.க.வில்    பெரிய    குழப்பங்கள்    ஏற்பட்டன.  ஓ.பன்னீர்செல்வம் நள்ளிரவிலேயே முதல்–அமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து சசிகலா கட்சியில் பொதுச்செயலாளர் ஆனார். சசிகலா பெயர் முதல்–அமைச்சர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு வந்து சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குசென்ற நேரத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராகவும், டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். சிறிதுகாலத்தில் டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் அணி என்று  3  அணிகளாக  அ.தி.மு.க. பிரிந்திருந்தது. இப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, இரட்டை இலை சின்னமும் கிடைக்காமல் இருந்தால், அவரது புகழுக்கே பெரிய பங்கம் வந்துவிடும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.க. கட்சியை உருவாக்கியபோது, அவருடன் இருந்தவர்கள் எல்லாம் கவலைப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியையும், எடப்பாடி பழனிசாமி அணியையும் ஒன்றுசேர்க்க நடந்த முயற்சிகள் வெற்றிப்பெற்றுள்ளன. ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்ற பழமொழிக்கேற்ப, நேற்று 2 அணிகளும் ஒன்றாக இணைந்தன. கட்சியில் ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்–அமைச்சராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஆக, கட்சியில் இருந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தன. இனி ‘இரட்டை இலை’ சின்னத்தை பெறுவதற்கும் தடையில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 8 மாதங்களாக கட்சியில் இருந்த குழப்பத்தால், ஆட்சி என்ற சக்கரத்தின் வேகம் மிகமெதுவாகி விட்டது. ஊழல் மலிந்துவிட்டது என்பது மக்களின் மனக்குறை. இப்போது ஆட்சியில் குழப்பம் இல்லாதநிலையில், இனி நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நோக்கில், அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான நன்மைக்கும் ஆற்ற வேண்டிய பணிகளை வேகமாக ஆற்றவேண்டும். லஞ்ச–ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், பரவிவரும் டெங்கு காய்ச்சல் தொல்லை, அண்டை மாநிலங்களோடு இருக்கும் நீர் பங்கீட்டு பிரச்சினை, இலங்கை மீனவர் பிரச்சினை, ‘நீட்’ தேர்வுதான் எதிர்காலத்தில் இருக்கும் என்றவகையில், கல்வியின் தரம் மேம்பாடு, சட்டம்–ஒழுங்கு பிரச்சினை என்று மாநிலத்தின் நன்மைக்காக பாடுபடுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு அரசு இனி செயல்பட வேண்டும். இதுவரை உங்களைப் பற்றி நினைத்தீர்கள். இனி எங்களைப்பற்றியும் நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் மக்கள்.

Next Story