அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தார்மீக பொறுப்பு


அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தார்மீக  பொறுப்பு
x
தினத்தந்தி 27 Aug 2017 9:30 PM GMT (Updated: 27 Aug 2017 12:25 PM GMT)

பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு துறை ரீதியான செயல்பாடுகளில் வெற்றி ஏற்பட்டாலும்சரி, தோல்வி ஏற்பட்டாலும்சரி நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பது காலம் காலமாக சொல்லிவரும் கருத்தாகும். ஆனால் வெற்றி ஏற்படும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லும் அவர்கள், தோல்வி ஏற்படும்போது மட்டும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை. ஆனால் ரெயில்வே துறையில் மட்டும் எப்போதும் விபத்துகள் ஏற்படும்போதும் அதற்கான பொறுப்பை ரெயில்வே துறை மந்திரிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். 1956–ல் தமிழ்நாட்டில் உள்ள அரியலூரில் நடந்த ரெயில் விபத்தின்போது உடனடியாக அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்த விபத்தில் 150–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட உடன் ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.

1999–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு பெரிய ரெயில் விபத்து 290 உயிர்களை பலி வாங்கியவுடன் அப்போது ரெயில்வே மந்திரி நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதுபோல 2000–ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது நடந்த 2 ரெயில் விபத்துகள் அவரை பெரிதும் பாதித்தன. இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுகூறி அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது கடந்த 19–ந் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே நடந்த ஒரு ரெயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் காயமடைந்தனர். மீண்டும் 23–ந் தேதி உத்தரபிரதேசம் அவுரையா மாவட்டத்தில் நடந்த மற்றொரு ரெயில் விபத்தில் 70 பேர்களுக்கு மேல் காயமடைந்தனர். இந்த ரெயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் இல்லை. காத்திருக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் உடனடியாக ரெயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்துவிட்டார். வடக்கு ரெயில்வே பொது மேலாளர், டிவி‌ஷனல் மேனேஜர் போன்ற உயர் அதிகாரிகள் விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டனர். சீனியர் டிவி‌ஷனல் என்ஜினீயர் உள்பட 4 உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஒழுங்கு நடவடிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விபத்துகள் நடக்கும்போது கீழ்மட்ட ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை உயர் அதிகாரிகள் மீதே கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. உயர் அதிகாரிகள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதும், அவர்களை விடுமுறையில் போகச் சொல்வதும், இடைநீக்கம் செய்வதும் வரவேற்கத்தக்கதுதான். சாலைகளிலும் இதுபோன்ற பெரிய விபத்துகள் நடந்தால் அதில் வடிவமைப்பு கோளாறு இருந்தாலோ, கண்காணிப்பு இல்லையென்றாலோ தார்மீக பொறுப்பேற்க சொல்ல வேண்டும். ரெயில்வே துறையில் மட்டும் இவ்வாறு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் நடவடிக்கைகளுக்கு உட்படுவதுபோல மத்திய, மாநில அரசுகளில் உள்ள அனைத்து துறைகளிலும், அனைத்து பணிகளிலும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும் தார்மீக பொறுப்பேற்க சொன்னால் நிச்சயமாக அரசு நிர்வாகங்களில் தவறுக்கு இடம் இல்லாமல் தூய்மையும் இருக்கும், வேகமும் இருக்கும், மக்களுக்கு பெரிதும் பயனும் விளைவிக்கும்.

Next Story