மந்திரிசபை மாற்றத்தில் செயல்பாட்டு திறன்


மந்திரிசபை மாற்றத்தில் செயல்பாட்டு  திறன்
x
தினத்தந்தி 4 Sep 2017 9:30 PM GMT (Updated: 2017-09-04T23:49:22+05:30)

ஒரு திறமையான தலைமை ஆசிரியர் எப்படி தன் மாணவர்களின் திறமையை மதிப்பிடுவாரோ, அதுபோல பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்த அனுபவத்தில், 2014–ம் ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே தன் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாட்டையும், மத்திய அரசாங்கத்தில் உள்ள செயலாளர்களின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.

ரு திறமையான தலைமை ஆசிரியர் எப்படி தன் மாணவர்களின் திறமையை மதிப்பிடுவாரோ, அதுபோல பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருந்த அனுபவத்தில், 2014–ம் ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே தன் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாட்டையும், மத்திய அரசாங்கத்தில் உள்ள செயலாளர்களின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். இதன் விளைவாகத்தான், இதுவரை 2 முறை மந்திரிசபை மாற்றம் நடந்துள்ளது. செயலாளர்களும் அவ்வப்போது மாற்றப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே இருக்கும் நிலையில், ஏற்கனவே மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில், எப்படியும் 360 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சரிந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலையை மீட்கவும், விவசாயம் இன்னும் வளம்பெறவும், மத்திய அரசாங்கம் தீட்டி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் சமூகநல திட்டங்கள் எல்லாம், 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கிலும், அரசு நிர்வாகம் இன்னும் வேகமாக சுழல வேண்டும் என்ற நோக்கிலும், பிரதமர் நரேந்திர மோடி தனது சீன சுற்றுப்பயணத்துக்கு முன்பு மந்திரிசபையை மாற்றி அமைத்திருக்கிறார்.

இந்த மந்திரிசபை மாற்றத்தில், அரசியல் அளவுகோலோ, சாதி, மத அளவுகோலோ, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவமோ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மந்திரிகளின் செயல்பாடு மற்றும் துறைகளின் நிர்வாக வேகம் ஆகியவை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. ராஜாங்க மந்திரிகளாக புதிதாக 9 பேர் பதவியேற்றுள்ளனர். தற்போது ராஜாங்க மந்திரிகளாக இருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் மந்திரிகளாவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், பெரிய ஜாக்பாட் யாருக்கு என்றால், நிர்மலா சீதாராமனுக்குத்தான். இதுவரையில் இல்லாத அளவு முதல் முறையாக ஒரு பெண் முழுநேர ராணுவ கேபினட் மந்திரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு இந்திராகாந்தி தான் பிரதமராக இருந்த நேரத்தில், 1975–ம் ஆண்டிலும், 1980–1982–ம் ஆண்டிலும் ராணுவ இலாகாவை கூடுதலாக தன்வசம் வைத்திருந்தார். இந்த 4 பேரும், அவரவர் வகித்த துறையில் ராஜாங்க மந்திரிகளாக இருந்து, மிகத்திறமையாக செயல்பட்டதன் காரணமாகத்தான், அதற்குரிய பரிசாக கேபினட் மந்திரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பல மந்திரிகள் மந்திரிசபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் காவல் துறை பணிகளில் மிகத்திறமையாக இருந்தவர்களின் சேவை நிச்சயமாக அரசாங்கத்துக்கு தேவை என்ற அடிப்படையில், புதிய மந்திரிகளில் 4 பேர் மந்திரிசபைக்குள் நுழைந்துள்ளனர். இதில், இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லை. ஒருபக்கம் திறமைதான் அளவுகோல் என்றாலும், மற்றொரு பக்கம் பெரிதும் எதிர்பார்த்த ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்து யாருக்கும் மந்திரிசபையில் இடம் ஒதுக்காததை பார்த்தால், பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியின் துணையும் இல்லாமல், நிச்சயமாக பா.ஜ.க.வால் இப்போது நிர்ணயித்துள்ள 360 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற இலக்கை அடைந்துவிடுவோம் என்ற உறுதிப்பாடு தெரிகிறது. மொத்தத்தில், செயல்பாட்டு திறனை மட்டுமே அளவுகோலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மந்திரிசபையில், இனி நிச்சயமாக நிர்வாகம் வேகம் அடையும். இதுவரையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத பா.ஜ.க. அரசாங்கம், செயல்பாட்டு திறன்கொண்ட அரசு என்ற பெயர் வாங்குவது, அடுத்த 18 மாதகால செயல்பாட்டில்தான் இருக்கிறது.

Next Story