சாலை விபத்துகளில் முதலிடம் வேண்டாமே!


சாலை விபத்துகளில் முதலிடம் வேண்டாமே!
x
தினத்தந்தி 7 Sep 2017 10:00 PM GMT (Updated: 7 Sep 2017 1:28 PM GMT)

2016–ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை, 2015–ம் ஆண்டில் நடந்ததைவிட 4.1 சதவீதம் குறைந்திருக்கிறது.

ந்தியா முழுவதிலுமே சாலை விபத்துகளும், விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கவலையளிக்கும் வகையில் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை வெளியிடும்போது விபத்துகளை குறைக்கவேண்டும். விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்கவேண்டும் என்று சிலநாட்கள் பரபரப்பாக பேசப்படும். விவாதங்கள் நடத்தப்படும். பிறகு கொஞ்சநாட்களில் இந்த பரபரப்புகள் எல்லாம் காற்றில் கலந்த கீதமாக மறைந்துவிடும். தற்போது 2016–ம் ஆண்டுக்கான இந்திய சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கை மத்திய மந்திரி நிதின் கட்காரியால் வெளியிடப்பட்டது. இதில், 2016–ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை, 2015–ம் ஆண்டில் நடந்ததைவிட 4.1 சதவீதம் குறைந்திருக்கிறது. அதாவது 2015–ம் ஆண்டில் 5 லட்சத்து ஆயிரத்து 423 விபத்துகள் நடந்த நிலையில், 2016–ம் ஆண்டில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 652 விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2015–ம் ஆண்டில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். 2016–ம் ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 785 பேர் இறந்திருக்கிறார்கள். 

விபத்துகான காரணங்களை எடுத்துக்கொண்டால், அதிவேகம் முதல் இடத்திலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சிக்னலை தாண்டியது, வலதுபக்கம் வாகனங்களை திடீரென திருப்பி ஓட்டிச்செல்வது, மஞ்சள் கோட்டை தாண்டிச்செல்வது, விதிமுறையை மீறி வாகனங்களை முந்திச்செல்வது, ஒருவழிபாதை என்று தெரிந்தும் விதிமீறிச் செல்வது, வண்டியை ஓட்டிச்செல்லும்போது செல்போனில் பேசுவது என்று கூறப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அதிகம் பேர் 25–லிருந்து 35 வயதுக்குள்ளானவர்களாக இருக்கிறார்கள். ஆக, பெரும்பாலான விபத்துகளில் குடும்பத்தலைவர், குடும்பத்துக்கு சம்பாதித்து கொண்டிருந்தவர்கள்தான் உயிரிழந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக கவலைக்குரியதாகும். விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதுபோல விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தாற்போல், தமிழ்நாடு 2–வது இடத்தில் இருக்கிறது. 2015–ஐவிட 2016–ல் தமிழ்நாட்டில் அதிகம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரத்து 218 பேர் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் உயிரிழந்திருக்கிறார்கள். விபத்துகளில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்பேர் அதாவது, 82 ஆயிரத்து 163 பேர் காயமடைந்துள்ளனர். 

நகரங்களை எடுத்துக்கொண்டால், சென்னையில்தான் அதிக விபத்துகள் அதாவது, 7 ஆயிரத்து 486 விபத்துகள் நடந்துள்ளன. கோயம்புத்தூரில் 1,354 விபத்துகளும், மதுரையில் 946 விபத்துகளும், திருச்சியில் 657 விபத்துகளும் நடந்துள்ளன. ஆக, தமிழ்நாட்டில் விபத்துகளை தடுப்பதிலும், விபத்துகளில் உயிரிழப்பவர்களை தடுப்பதிலும் உடனடியாக தீவிர கவனம் செலுத்தவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. சாலைவிதிகளை மீறுவது போலீசாராலும், போக்குவரத்து துறையாலும் உடனடியாக தடுக்கப்படவேண்டும். சாலைகளில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வகையிலான கோடுகள் அனைத்து இடங்களிலும் போடப்படவேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகளால் அதிக விபத்துகளும், அதிகளவில் உயிரிழப்புகளும் நடந்துள்ளதால், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் லைசென்சு வழங்குவதில் தீவிர சோதனைக்குப்பிறகே வழங்கவேண்டும். சாலை விழிப்புணர்வு குறித்து தீவிரமான பிரசாரங்கள் நடத்தப்படவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கவும், ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சாலைகள் வடிவமைப்பதில் இன்னும் தீவிரகவனம் செலுத்தவேண்டும். போக்குவரத்து நிர்வாகம், போக்குவரத்து மேலாண்மையில் போக்குவரத்து போலீசார் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். மொத்தத்தில், விபத்துகளை தடுப்பதிலும், உயிரிழப்புகளை தடுப்பதிலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள்தான் முக்கியமாக இருக்கும்.

Next Story