தேசிய மொழியாக தமிழ் மொழி


தேசிய  மொழியாக  தமிழ்  மொழி
x
தினத்தந்தி 16 Oct 2017 9:30 PM GMT (Updated: 16 Oct 2017 12:30 PM GMT)

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்பதுதான் தமிழர்களுக்கு தனி சிறப்பாகும்.

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்பதுதான் தமிழர்களுக்கு தனி சிறப்பாகும். இப்போது தமிழ்நாட்டிலும், பல இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகள், தமிழர் நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில், கலைப்பொருட்கள் மட்டுமல்லாமல், நாணயங்கள், தமிழ் எழுத்துகள் என எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியார் தமிழ் மொழியின் சிறப்பைப்பற்றி எழுதிய கவிதையில், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ..... தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்றார். ஆனால், இன்பத் தமிழ்மொழியில் இன்னிசை பாடமுடியாத நிலை இங்கிலாந்து நாட்டிலும், துணை சபாநாயகரே தமிழில் பேசமுடியாத நிலை இந்திய பாராளுமன்றத்திலும் நடந்ததுதான் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு லண்டன் மாநகரில் ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் இன்னிசை உலகில் தனிப்பெரும் புகழோடு உலாவந்துகொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி நடந்தது. பெயரிலேயே ‘நேற்று இன்று நாளை’ என்று தமிழில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் சில பாடல்களை இந்தியிலும், பல பாடல்களை தமிழிலும் பாடினார். இசைக்கு மொழி பேதம் கிடையாது என்பதை உணராத சில ரசிகர்கள், இந்தியில் பாடல்களை பாடவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டார்கள். இது இசை உலகுக்கே பெரிய அவமானமாகும். தமிழில் ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் நடந்த இன்னிசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தமிழில் பாட்டு பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும். அதுதான் அதிர்ச்சி என்று நினைத்தால், இந்திய பாராளுமன்ற துணை சபாநாயகரும், மூத்த உறுப்பினருமான தம்பிதுரை ‘வெள்ளையனே வெளியேறு’ பவள விழாவில் தமிழில் பேசத்தொடங்கினார். இதற்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தம்பிதுரை தமிழில் பேசுவதை மற்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கவில்லை.

இந்த நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘நீங்கள் தமிழில் பேசப்போகிறீர்கள் என்று தெரிந்தால், முன்கூட்டியே உங்களுக்கு மொழிபெயர்ப்பு வசதி செய்து கொடுத்திருக்கக்கூடும்’ என்று தெரிவித்தார். வேறுவழி யில்லாமல், தம்பிதுரையும் தமிழில் பேசமுடியாமல், ஆங்கிலத்தில் பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், தம்பிதுரை பேசும்போது ஒரு நல்லகருத்தை தெரிவித்தார். ‘இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்கமொழி உள்பட அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்படவேண்டும்’ என்று வலியுறுத்தினார். நீண்டநெடுநாட்களாகவே தமிழ் மொழியை தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்த கோரிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு மூத்த தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கையாகும். இடையில் இதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. இப்போது ஏ.ஆர்.ரகுமானுக்கும், தம்பிதுரைக்கும் நேரிட்ட சம்பவங்களை பாடமாகக்கொண்டு எல்லோருமே தமிழை தேசிய மொழியாக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து, இதற்கென தனி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழின் சிறப்பைப்பற்றி அனைத்து மாநிலத்தவர்களும், ஏன் வெளிநாட்டினரும் புரிந்துகொள்ளும்வகையில், இந்தியாவிலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் நிறைய ஏற்பாடுகளை செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் இது. விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்படவேண்டும். தமிழக அரசும் இந்த இரு சம்பவங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழின் மேன்மையை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம்? என்பதை தமிழ்மொழி ஆன்றோர்கள் கொண்ட தமிழ் வளர்ச்சி குழுவை அமைத்து, அவர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். 

Next Story