அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சீராக இயங்க வேண்டும்


அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சீராக இயங்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Nov 2017 9:30 PM GMT (Updated: 9 Nov 2017 1:55 PM GMT)

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரப்பிரசாதமாக அமைந்தது.

மிழ்நாட்டில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரப்பிரசாதமாக அமைந்தது. கடந்த 10 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை போன்ற இடங்களில் கடுமையான மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியநேரத்தில் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும், சிறிய கார்கள் வைத்திருப்பவர்களும் அந்த தண்ணீருக்குள் வாகனங்களை ஓட்டமுடியாது என்றநிலையில், ரெயில்களையும், அரசு போக்குவரத்துக்கழக பஸ்களையுமே பெரிதாக நம்பியிருந்தனர். ஒருசில வாடகை கார் கம்பெனிகளும் இந்த மழையில் எங்களால் வாகனங்களை இயக்க இயலாது என்று நிறுத்திவைத்து விட்டனர். எனவே, அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஒன்றைத்தான் மக்கள் சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படாமல் ஓடியதால் ஓரளவுக்கு நிலைமைகள் சமாளிக்கப்பட்டன. ஆனால், சென்னையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பெரும்பாலும் மழையினால் ஒழுகிக்கொண்டிருந்தன. ஏராளமான பஸ்கள் ஓடவில்லை.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 48 லட்சம் மக்கள், அரசு போக்குவரத்துக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பஸ்களில், 833 ரூட்களில் பயணம் செய்துவந்தனர். ஆனால், இந்த மழைகாலத்தில் ஏறத்தாழ 350 பஸ்கள் ஓடவில்லை. இதில் 230 பஸ்களின் மேற்கூரையில் இருந்து நிறைய தண்ணீர் ஒழுகியதாலும், ‘சீட்’கள் எல்லாம் மிகவும் பழுதாகி இருந்ததாலும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நிறையபேர் மழை காரணமாக பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை 5 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டலாம். அல்லது 8 ஆண்டுகள் வரையில் ஓட்டலாம். அதன்பிறகு அந்த பஸ்கள் ஓட்டுவதற்கு தகுதியில்லாத காலாவதியான பஸ்களாக ஆகிவிடுகின்றன. இப்படி பழைய பஸ்களை இயக்குவதால்தான் அடிக்கடி ‘ரிப்பேர்’ ஆகிறது. டீசலும் அதிகளவில் செலவாகிறது. ஏராளமான புகையையும் கக்கிக்கொண்டு செல்வதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மழைகாலத்தில் மேற்கூரையில் தண்ணீர் ஒழுகுவதும் இதுபோன்ற பஸ்களால்தான்.

இந்தியா முழுவதும் கடந்த 2015–16–ம் ஆண்டில் உள்ள பொது போக்குவரத்துகளின் செயல்பாடுகள் தொடர்பான ஒரு அறிக்கையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. இதில் நாட்டிலேயே காலாவதியான பஸ்களை இயக்குவதில் முதல் இடத்தை பீகாரும், இரண்டாவது இடத்தை தமிழ்நாடும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக்கழகங்கள் இருக்கின்றன. இந்த போக்குவரத்துக்கழகங்களில் 20 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஏராளமான பஸ்கள் காலாவதியான பழைய பஸ்கள்தான். இந்தநிலையை, சீர்படுத்த அரசு போக்குவரத்துக்கழகங்களும், தமிழக போக்குவரத்துத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால்தான் இதுபோன்ற நிலைமைகளை சீர்படுத்த நிதி ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. நிதிநிலையை சீர்படுத்த பஸ் கட்டணத்தை உயர்த்தி, நிர்வாக செலவுகளை சிக்கனப்படுத்தி லாபகரமாக இயக்க செய்யலாம். இப்போதெல்லாம் பொதுமக்கள் தொலைதூரம் பயணம் செய்வதற்கு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களைவிட கூடுதலாக கட்டணம் இருந்தாலும் நிறைவான வசதியுள்ள தனியார் போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ஆக, பயணிகளை பொருத்தமட்டில், கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, வசதி இருக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலைமை இருக்கிறது. எனவே ஒழுகாத பஸ்கள், இடையில் நிற்காத பஸ்கள், கிழியாத ‘சீட்’கள் என்று அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ்களை இயக்கும் போக்குவரத்துக்கழகங்களாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Next Story