கவர்னர் நடத்திய ஆய்வுக்கூட்டம்


கவர்னர்  நடத்திய  ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-15T19:31:17+05:30)

தமிழக அரசிலும், அரசியலிலும் இப்போது ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கியது கோயம்புத்தூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்திய அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம்தான்.

மிழக அரசிலும், அரசியலிலும் இப்போது ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கியது கோயம்புத்தூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்திய அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம்தான். கடந்தமாதம் 6–ந்தேதி தமிழ்நாட்டின் 30–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். முதல்நாள் பதவியேற்ற உடனேயே அவர், ‘நான் எந்தமுடிவு எடுத்தாலும், அது தகுதியின் அடிப்படையில்தான் இருக்கும், எனது நடவடிக்கைகளெல்லாம் அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் இருக்கும், எனது வேலை என்பது மாநில அரசில் முழுமையான வெளிப்படைத்தன்மையும், தூய்மையும் இருப்பதை உறுதிப்படுத்துவதுதான், வளர்ச்சி நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் மாநிலஅரசுக்கு முழு ஒத்துழைப்பையும் நல்குவேன்’ என்று கூறினார். அரசியல் சட்டத்தில் கவர்னரின் அதிகாரம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அதன் வேந்தர் என்றமுறையில் கலந்துகொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலையில் அந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர், மாநகராட்சி ஆணையர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்தக்கூட்டம் ஏறத்தாழ 3 மணி நேரம் நீடித்தது. அதிகாரிகள், ஸ்லைடுகள் மூலமாக மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், சட்டம்–ஒழுங்கு நிலைமைகள், குற்றங்கள் விவரங்களையும், திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இந்தக்கூட்டத்தில் கவர்னர் எந்தவித உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. கேள்விகளையும் கேட்கவில்லை. அவரிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மட்டும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டார். நேற்று 2–வது நாளாக கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ்நிலையத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பிடத்தை ஆய்வுசெய்து, தூய்மை பணியில் ஈடுபட்டு, மற்றொரு நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லப்போவதாக தெரிவித்து இருக்கிறார். அதிகாரிகள் கூட்டம் முடிந்தவுடன் அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் போன்ற யாரும் தன்னை சந்திக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் ஆளுங்கட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் மட்டும் சந்தித்து இருக்கிறார்கள். சில தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுபோன்ற விதிமீறல்கள் தடுக்கப்படுவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதுபோன்ற பல கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களிடம், ‘கவர்னர் இதையெல்லாம் நான் கலெக்டரிடம் கூறுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இப்படியொரு ஆய்வுக்கூட்டத்தை இதுவரையில் இருந்த கவர்னர்கள் நடத்தவில்லை. இது அத்துமீறல், அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது என்று தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாநில சுயாட்சி கொள்கைக்கு இது விரோதமானது என்றும் அந்த கட்சிகள் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ, அதிகாரிகளை சந்தித்து கவர்னர் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என்றார். இது ஆரோக்கியமான வி‌ஷயம்தான். நமக்கு நல்ல கவர்னர் கிடைத்துள்ளார். அவர் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதால் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் அதிகமாகத்தான் வரும். இதுபோன்று கவர்னர் ஆலோசனை நடத்துவது தவறு இல்லை, இது மாநில சுயாட்சி உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறியிருக்கிறார். சமூக ஆர்வலர்களைப் பொறுத்தமட்டில், கவர்னரின் ஆய்வுக்கூட்டம் நிர்வாக குறுக்கீடு என்றால் அதை அரசுதான் எதிர்க்கவேண்டும். ஆனால் அமைச்சர் இதை ஆதரித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகள்தான் எதிர்க்கிறார்கள். கவர்னர் இவ்வாறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது நிர்வாகத்தை தூய்மைப்படுத்துவதாகத்தான் அமையும். முதல்–அமைச்சரின் கரத்தை வலுப்படுத்தி, செம்மைப்படுத்தவும் உதவும், அதிகாரிகள் கூட்டத்தைக்கூட்டி நிலைமைகளை ஆய்வு செய்திருக்கிறாரே தவிர, அவர் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்ற பேச்சுக்கும் இடம் இல்லை என்று கருதுகிறார்கள்.

Next Story