நிர்பயா நிதிக்கு கூடுதல் திட்டங்கள் வேண்டும்


நிர்பயா  நிதிக்கு  கூடுதல்  திட்டங்கள்  வேண்டும்
x
தினத்தந்தி 16 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-16T18:26:00+05:30)

மத்திய–மாநில அரசுகளுக்கு, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை என்பது ஒரு எச்சரிக்கை மணிபோல கருதப்படுகிறது.

த்திய–மாநில அரசுகளுக்கு, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை என்பது ஒரு எச்சரிக்கை மணிபோல கருதப்படுகிறது. எதிர்கட்சிகளுக்கோ வாழைப்பழத்தை உரித்து கையில் கொடுப்பதுபோல, அரசை நோக்கி கண்டன கணைகளை வீசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அந்தவகையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையில், மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ள ‘நிர்பயா நிதி’யை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று குறை கூறியிருந்தது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசாங்கம் 2013–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்கி வருகிறது. இந்த நிதிஆதாரத்தை பயன்படுத்துவதற்கான கருத்துருகளை உருவாக்குமாறு மத்திய அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசு துறைகளுக்கு மத்திய அரசாங்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 10 லட்சத்திற்கும்மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் பொதுப்போக்குவரத்தை ஜி.பி.எஸ். கருவிமூலம் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவேண்டும் என்று ஒரு திட்டத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல்செய்தது. ‘இந்த கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்குமான செலவுகளை ‘நிர்பயா நிதி’யிலிருந்து மாநில போக்குவரத்துத்துறை பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நிதி தேவையை மதிப்பீடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோரப்பட்டிருந்தது. 2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை இருப்பதால் ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் இந்த நிதியைப்பெற தகுதியிருக்கிறது. ஆனால் தமிழக அரசு இந்த 4 நகரங்களிலும், எந்த கட்டுப்பாட்டு அறையையும் அமைக்கவில்லை. ஆனால், தமிழக அரசு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய அரசாங்கத்துக்கு போலீஸ் இலாகா, போக்குவரத்துத்துறை மூலமாக சில வசதிகளை மேற்கொள்ள நிதி கோரியுள்ளது. போலீஸ் டி.ஜி.பி., பொதுமக்கள் அதிகம்  கூடும்  இடங்களில்   கண்காணிப்பு   கேமரா, ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட மொபைல் வேன்கள் வாங்க ரூ.17 கோடிக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளார். போக்குவரத்துத்துறை சார்பில் 200 பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.8.4 கோடிக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. சமூகநலத்துறை சார்பில் ரூ.23 கோடிக்கு ‘ஹெல்ப் லைன்’ அமைக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசாங்கம் அனைத்து மாநில கோரிக்கைகளையும் ஒன்றாக வைத்து பரிசீலித்து நிதி ஒதுக்கும். தமிழக அரசின் இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது. இந்த தொகை போதாது. தமிழக அரசு இன்னும் விரிவான திட்டங்களை வகுத்து கூடுதல் நிதி பெற முயற்சிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் 2015–ம் கணக்குப்படி, 421 கற்பழிப்புகள், 1,361 பாலியல் வன்முறை, 909 பெண்களை பின்தொடருதல், 65 வரதட்சணை கொடுமைகள் நடந்திருக்கிறது. இந்தநிலையில், எங்களுக்கு இந்த 4 நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகளவில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்காக சாலைப்பகுதிகளில், ரெயில் மற்றும் பஸ்நிலையங்களில் பெண்கள் அதிக நடமாட்டம் உள்ள கடைப்பகுதிகள், சந்தைகள் போன்ற அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ‘நிர்பயா’ நிதியிலிருந்து தாராளமாக நிதியை கோர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ரெயில்வேத்துறை மற்றும் ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் ‘நிர்பயா’ நிதியிலிருந்து பெண்கள் பாதுகாப்புக்காக பணத்தை பெற்றிருக்கிற நிலையில், தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் பெண்கள் பாதுகாப்புக்காக நிறைய திட்டங்களைத்தீட்டி, மத்திய அரசாங்கம் கையில் வைத்திருக்கும் நிர்பயா நிதியில் பெண்கள் பாதுகாப்புக்காக கணிசமான நிதியை பெறவேண்டும்.

Next Story