இந்தியாவே உற்றுப் பார்க்கும் ஆர்.கே.நகர்


இந்தியாவே உற்றுப் பார்க்கும்  ஆர்.கே.நகர்
x
தினத்தந்தி 22 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-22T19:37:58+05:30)

சென்னையில் ஆர்.கே.நகர் என்று சுருக்கமாக அழைக்கப்படும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகும்.

சென்னையில் ஆர்.கே.நகர் என்று சுருக்கமாக அழைக்கப்படும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இரு தேர்தல்களில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதியாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி ஜெயலலிதா மறைந்தவுடன் இந்த தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் நடைமுறைப்படி காலியாக உள்ள ஒரு தொகுதியில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்தவகையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12–ந்தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்திருந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி என்றும், சசிகலா அணி அ.தி.மு.க. (அம்மா) அணி என்றும் பெயர் சூட்டப்பட்டது. தி.மு.க. சார்பில் மருதுகணேசும், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும், ஜெ.தீபா பேரவை சார்பில் தீபாவும், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரனும் மற்றும் சில வேட்பாளர்களும் போட்டியில் நின்றனர்.

சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பமும் சின்னமாக வழங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இந்தத்தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகமாக இருக்கிறது என்றும், பரிசுப்பொருட்கள் மழைபோல பொழிந்தன என்றும் கடுமையான புகார்கள் கூறப்பட்டன. தேர்தல் பணத்தேர்தலாகிவிட்டது என்று இந்தியா முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், டோக்கன்கள், செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள், செய்திபத்திரிகை சந்தா, பால்கூப்பன்கள், வங்கி கணக்குக்கு நேரடியாக பட்டுவாடா, செல்போன் வாலட்களில் (மொபைல் பர்ஸ்) பணம் அனுப்புவது போன்ற மிக நூதனமாக முறைகேடுகள் நடப்பதாக தேர்தல்கமி‌ஷனுக்கு புகார் வந்தது. தங்கள் கையையும் மீறி எல்லாமே சென்றுவிட்டது, இனி தேர்தல் நடந்தால் நியாயமான தேர்தலாக இருக்காது என்று உணர்ந்த தேர்தல் கமி‌ஷன், எல்லா ஏற்பாடுகளும் முடிந்து ஏப்ரல் 12–ந்தேதி தேர்தல் நடக்க வேண்டிய நேரத்தில் 9–ந்தேதி நள்ளிரவில் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இது பெரிய பரபரப்பாக ஆகிவிட்டது. இதன்காரணமாக 6 மாதங்களுக்குள் நடக்க வேண்டிய தேர்தல், ஒரு ஆண்டை நெருங்கப்போகிற நிலையிலும் இன்னமும் நடக்கவில்லை.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு, டிசம்பர் 31–ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தேர்தல் கமி‌ஷன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 45,819 போலி வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டதாக கூறுகிறது. ஆனால், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்று தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால், இதை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்க வாய்ப்புள்ளது. எனவே, டிசம்பருக்குள் தேர்தல் நடத்தும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல்கமி‌ஷனிடமும், தமிழக காவல்துறையிடமும், ஆள், அம்பு, சேனை, படை என்று பெரிய காவல் கட்டமைப்பு வசதியிருக்கிறது. எனவே, இதுபோன்ற சாக்குபோக்குகளை தேர்தல்கமி‌ஷன் சொல்லாமல் எவ்வளவு விரைவாக ஆர்.கே.நகர் தேர்தலை அறிவிக்க முடியுமோ அறிவித்து, பணப்பட்டுவாடாவோ, பரிசுமழையோ பொழிவதை தடுக்க ஏற்கனவே நடந்த அனுபவத்தை பாடமாகக் கொண்டு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எவ்வாறு பணப்பட்டுவாடா, பரிசு பட்டுவாடாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி இந்தியா முழுமைக்கும் உதாரணமாக விளங்கியதோ, அதுபோல இனி நடக்கப் போகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் நடந்தால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலைப்போலத்தான் நடக்க வேண்டும் என்று இந்த நாடு சொல்லும் அளவிற்கு உண்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும். இதில் பொதுமக்களின் பங்களிப்பும் பெருமளவில் இருக்கிறது. எங்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்ற வகையில், தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் நிறைகுறைகளைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, பணத்தையோ, பரிசுப்பொருளையோ எதிர்பார்க்கக் கூடாது.


Next Story