திட்டமழை பொழிகிறது


திட்டமழை  பொழிகிறது
x
தினத்தந்தி 6 Dec 2017 9:30 PM GMT (Updated: 6 Dec 2017 6:05 PM GMT)

அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர்வளம் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு மந்திரி நிதின் கட்காரி, தமிழக மக்களின் மனமெல்லாம் குளிரும்வகையில் பல்வேறு திட்டங்களை மழையாக பொழிந்துவிட்டு சென்றிருக்கிறார்.

ண்மையில் சென்னை வந்திருந்த மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர்வளம் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு மந்திரி நிதின் கட்காரி, தமிழக மக்களின் மனமெல்லாம் குளிரும்வகையில் பல்வேறு திட்டங்களை மழையாக பொழிந்துவிட்டு சென்றிருக்கிறார். நதிகள் இணைப்பு, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டங்களுக்காக அவர் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்தத்திட்டங்கள் மூலம் நிச்சயமாக நீர்வளம் பெருகும். கடல்வழிப்போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து மேம்படும். கடல்வழிப்போக்குவரத்து புதிய அத்தியாயத்தை காணும். தென்னக நதிகள் இணைப்பில் ஒரு புதிய முயற்சியை மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடும் நீரில் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் கடலில் போய்வீணாக கலக்கிறது. மந்திரி அறிவித்த திட்டப்படி, இந்த நதியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீரை நாகார்ஜூனா சாகர் அணைக்கட்டுக்கு திருப்பிவிட்டு, அங்கிருந்து கிருஷ்ணா நதியில்விட திட்டம் இருக்கிறது. பின்பு அந்த தண்ணீர் சோமசீலா அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து காவிரியில் கல்லணைக்கு கொண்டுபோய் சேர்க்கும் திட்டம் இது.

காவிரியில் நிச்சயமாக இந்தத்திட்டத்தின் மூலம் 100 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இந்தத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதற்காக புதிய கால்வாய்களை வெட்டப்போவதில்லை. இரும்பு குழாய்கள் மூலமே தண்ணீரை கொண்டுவருவதற்கான திட்டம் இருக்கிறது. இதனால் நிலம் கையகப்படுத்தவேண்டிய பிரச்சினையே இல்லை. இதுகுறித்து தொழில்நுட்ப ஆய்வுகளை முடித்துவிட்டு, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா முதல்–மந்திரிகளின் கூட்டத்தைக்கூட்டி இந்தத்திட்டம் இறுதிவடிவம் காணும் என்று கூறியிருக்கிறார். இந்த திட்டச்செலவில் 90 சதவீதம் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். 10 சதவீதத்தைத்தான் இந்த 4 மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில், மாநில அரசுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால், நிதிச்சுமை இருக்காது. 2–வது திட்டமாக சத்தீஸ்கர், மராட்டிய மாநில எல்லையில் உள்ள இந்திராவதி ஆற்றிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீரை எடுத்து நாகார்ஜூனா அணைக்கும், அங்கிருந்து சோமசீலா அணைக்கும் கொண்டுவந்து, பின்பு காவிரியில் விடுவதற்கான திட்டம். இந்தத்திட்டம் குறித்து மராட்டியம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்–மந்திரிகளோடு பேச இருப்பதாக மத்திய மந்திரி கூறியிருக்கிறார். தென்னக நதிகள் குறித்து கவர்னரிடமும், நிதின்கட்காரி பேசி இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசாங்கம் விரைவில் செயல்படுத்த இருக்கிறது.

தூத்துக்குடியில் பெரிய கப்பல்கள் வரும்வகையில் 16.5 மீட்டர் அளவுக்கு கடலை ஆழப்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி செலவில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் ஏற்றுமதியாளர்கள் கொழும்பு, சிங்கப்பூர் சென்று தங்கள் பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்து, நேரடியாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யலாம். தமிழ்நாட்டின் கனவு திட்டமான கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் பயணிகள் படகுப்போக்குவரத்தை தொடங்குவது என்றும், இதை தனியார்வசம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் வரை மட்டும் என்றில்லாமல், கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரை இந்த படகுப்போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். மத்திய மந்திரியை சந்தித்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்காக ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு இருக்கிறார். சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக ரூ.40 ஆயிரம் கோடி செலவில் பல பெரிய திட்டங்களை அறிவித்த நிதின் கட்காரி, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்துவிட்டால், 2 ஆண்டுகளில் அனைத்து திட்டங்களையும் தொடங்கிவிடுவோம் என்று கூறியதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

Next Story