அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்


அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்
x
தினத்தந்தி 11 Dec 2017 11:30 PM GMT (Updated: 11 Dec 2017 6:46 PM GMT)

தமிழ்நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள், 2 மத்திய பல்கலைக்கழகங்கள், தனியாருக்கு சொந்தமான 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள், 2 மத்திய பல்கலைக்கழகங்கள், தனியாருக்கு சொந்தமான 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழகம் மிக முக்கியமான பல்கலைக்கழகமாகும். ஏனெனில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 563 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் இதுதான் தாயாக கருதப்படும். அப்படிப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1½ ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘துணைவேந்தர்தான் ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவராக கருதப்படுகிறார்’.

என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பாடத்திட்டங்களை வகுப்பதிலும் மிக முனைப்புடன் செயல்படவேண்டிய அண்ணா பல்கலைக்கழகம், துணைவேந்தர் இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது நிச்சயமாக வருத்தத்திற்குரியதாகும். இந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ராஜாராம் பதவிகாலம் 2016-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதியோடு முடிவடைந்தது.

அதன்பிறகு பல மாதங்களுக்குப்பிறகு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் ‘சர்ச் கமிட்டி’ என்று அழைக்கப்படும் ‘தேடல்குழு’ அமைக்கப்பட்டது. இந்தக்குழுவுக்கு ‘தேடல்குழு’ என்றபெயர் எப்படி வந்தது என்றால், “பழைய காலங்களில் துணைவேந்தர் பதவிக்காக யாரும் விண்ணப்பங்களை அனுப்புவதில்லை. துணைவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர்கள் யார்? என்று ‘தேடல்குழு’ உறுப்பினர்கள், புகழ்வாய்ந்த, திறமைவாய்ந்த கல்வியாளர்களை தேடி அவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் வேண்டி விரும்பிக்கேட்டு பட்டியலில் சேர்ப்பார்கள்”. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. துணைவேந்தரை கவர்னர் நியமனம் செய்வதற்காக 3 பெயர்களை ‘தேடல்குழு’ பரிந்துரை செய்யவேண்டும் என்ற நியதிப்படி, இந்தக்குழு அனுப்பிய 3 பெயர்களையும், அப்போதைய பொறுப்பு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நிராகரித்தார்.

அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவன், கான்பூர் ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கே.அனந்தபத்மநாபன் ஆகியோர் அடங்கிய புதிய ‘தேடல்குழு’ அமைக்கப்பட்டது. இதில் அனந்தபத்மநாபன் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தொடர்ந்து இந்தப்பதவியில் இருக்க விரும்பாமல் ஆர்.எம்.லோதா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆக, மீண்டும் ‘தேடல்குழு’ இல்லாமல், பல்கலைக்கழக துணைவேந்தரும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத்தொடங்கியது.

இந்தநிலையில், தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றவுடன், இப்போது உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் தொடர்ந்து அரசு பிரதிநிதியாகவும், சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆர்.ஞானமூர்த்தியையும் கொண்டு ஒரு ‘தேடல்குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேடல்குழு அடுத்த 4 மாதங்களுக்குள் கவர்னருக்கு 3 பெயர்களை பரிந்துரை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார். இந்தமுறை எந்தவித தடங்கலும் இன்றி ‘தேடல்குழு’ செயல்படும். தகுதிவாய்ந்த 3 பெயர்களை பரிந்துரை செய்யும். அதில் மிகவும் பொருத்தமான ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நிச்சயம் கவர்னரால் நியமிக்கப்படுவார் என்பது தமிழக மக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக தேடல்குழுவும், ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச்செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதரை ஒருங்கிணைப்பாளராக கொண்ட பெரியார் பல்கலைக்கழக தேடல்குழுவும் மிகவும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றநோக்கில், யார்-யார்? துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்களோ, அவர்களது பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் அனுப்பி, அவர்களது பெயர்களெல்லாம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், ‘நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ என்பதில் மிகவும் அக்கறைக்கொண்டவர். அந்தவகையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

Next Story