ஆளில்லாத தீவுகளில் தேடவேண்டும்


ஆளில்லாத தீவுகளில் தேடவேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-12T17:33:57+05:30)

‘ஒகி’ புயல்பாதிப்பால் கரைக்கு திரும்பாத மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம்.

மிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற ஒருசில மாவட்ட மீனவர்களுக்குத்தான் இலங்கை கடற்படையால் பிரச்சினை ஏற்படுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு இந்த பிரச்சினைகள் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஒரேநாளில் கடலுக்குச்சென்று பாக்ஜலசந்தியில் மீன்பிடித்து திரும்புவதில்லை. ஆயிரம் கடல்மைல் தூரத்துக்குமேல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். ஏறத்தாழ 50 நாட்கள்வரை இவர்கள் கடலுக்குள் இருப்பது வழக்கம். கடந்த மாதம் 29, 30–ந்தேதி வீசிய ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றிருந்தார்கள். இப்போது அவர்களில் பலர் திரும்பிவிட்டாலும், இன்னும் 472 பேர் கரைக்கு திரும்பவில்லை என்று அரசு கூறுகிறது. அவர்களை இன்னும் சிறப்பு முயற்சி எடுத்து மீட்கவேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பல இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலைமறியல், ரெயில்மறியல் போராட்டத்தையொட்டி, 17 கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்பட 13 ஆயிரத்து 815 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளையெல்லாம் வாபஸ் பெறவேண்டும். மாநில கடல் எல்லை 12 கடல்மைல் தூரம்தான். இந்திய கடல்எல்லை 200 கடல்மைல் தூரம். அதற்குமேல் ஆயிரம் கடல்மைல் தூரமுள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குச் சென்றுதான் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். ஆனால், இப்போது காணாமல்போன மீனவர்களை தேடும்பணி இந்திய எல்லைக்குள்தான் நடக்கிறது. சிறப்பு பொருளாதார கடல்பகுதியிலும், அதற்கு அப்பால் சர்வதேச கடல்பகுதியிலும் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை தேடும்பணி நடைபெறவில்லை. அங்கு ‘ஒகி’ புயல்பாதிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம். மொராக்கா, மாலத்தீவு போன்ற பகுதிகளில்கூட ஒதுங்கியிருக்கலாம் என்று மீனவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். எனவே கடலோர காவல்படை கப்பல்களும், நமது ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று அங்கும், ஆள்இல்லாத தீவுகளிலும் தேடவேண்டும். 

பல மீனவர்கள் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பு வந்தால்போதும் என்ற உணர்வுடன் இன்னமும் தொலைத்தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அவர்களை உடனே கரைக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் அடிகளார் பேச்சை, கடற்படை ஒலிநாடாவில் பதிவுசெய்து அதை கடற்படை கப்பல்களிலிருந்தும், ஹெலிகாப்டர்களிலிருந்தும் வயர்லெஸ் மூலம் ஒலிபரப்பு செய்ய எடுத்துச்சென்றிருக்கிறார்கள். மீனவர்களின் வேண்டுகோள்படி, இந்த கப்பல்களும், விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று, இந்த உரையை அதிக சத்தத்துடன் ஒலிபரப்புச்செய்து மீனவர்களை கரைக்கு திரும்ப செய்யவேண்டும்.

Next Story