தென்மாவட்டங்களில் கடற்படை தளங்கள்


தென்மாவட்டங்களில் கடற்படை தளங்கள்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:30 PM GMT (Updated: 14 Dec 2017 12:15 PM GMT)

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உடனடியாக தென்கோடி மாவட்ட கடற்கரைகளில், கடற்படை தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

லங்கையில், சீனா கால் பதித்து விட்டது. இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அதிகாரபூர்வமாக சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள அம்பாந்தோட்டை என்ற கடற்கரை பகுதியில் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதே, இதை அமைக்கும் பணியை இந்தியாவுக்கு கொடுக்க வேண்டும் என்று பரவலாக பேச்சு எழுந்தது. ஆனால், ராஜபக்சே இதை சீனாவுக்கு கொடுத்து விட்டார். 2009–ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்போர் முடிவடைந்த நேரத்தில், இந்திய பத்திரிகையாளர் ஒருவர், ‘நீங்கள் சீனாவுக்கு இந்த துறைமுகத்தை அமைக்கும் பணியை கொடுத்ததினால், தமிழக மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். நீங்கள் இந்தியாவுக்கு இந்த பணியை கொடுத்திருக்கலாமே’ என்று கேட்டார். ஆனால், ராஜபக்சே, ‘நாங்கள் இந்தியாவிடமும் கேட்டோம், அவர்கள் சரியான முறையில் இதை அமைக்க எங்களிடம் கோரவில்லை’ என்று கூறினார். 

சீனாவுக்கு, இலங்கை ரூ.59 ஆயிரம் கோடி கடன்பாக்கி வைத்திருப்பதாக அப்போதைய நிதி மந்திரி தெரிவித்தார். 2010–ம் ஆண்டு நவம்பர் 18–ந்தேதி இந்த துறைமுகம் திறக்கப்பட்டது. மொத்த செலவில் 85 சதவீதத்தை சீனாவில் உள்ள வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றது. இந்த நிலையில், தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது, மொத்த கடனில் ஒரு பங்கு கடன் தொகைக்கு பதிலாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80 சதவீத பங்குகளை திருப்பித்தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுமட்டுமல்லாமல், 99 ஆண்டுகளுக்கு இந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகையாக வழங்க இலங்கை அரசு கையெழுத்திட்டது. துறைமுகம் மட்டுமல்லாமல், அதை சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்களும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இப்போது வந்து விட்டது. ஏற்கனவே சீனா முத்துமாலை என்ற கொள்கையின்படி, எப்படி கழுத்தை சுற்றி முத்துமாலை இருக்கிறதோ, அதுபோல இந்தியாவை சுற்றியுள்ள பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியாக பாகிஸ்தானில் குவாதர் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டது. 

இதுபோல, மாலத்தீவு, பர்மா போன்ற இடங்களிலும் சில திட்டங்களை நிறைவேற்றுகிறது. சிக்கிம், பூட்டான், திபெத் சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா தன் படைகளை முகாமிட்டுவருவது ஒருபக்கம் கவலையளிக்கிறது. அடுத்தபக்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தன் கைவசம் எடுத்துக்கொண்டது. இந்த துறைமுகம் வர்த்தக பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ரனில் விக்ரமசிங்கே சொன்னாலும், எதிர்காலத்தில் எந்தப்பணிகளுக்கு பயன்படுத்தும் என்பதை யாரும் உத்தரவாதமாக சொல்லமுடியாது. எனவே இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உடனடியாக தென்கோடி மாவட்ட கடற்கரைகளில், கடற்படை தளங்கள் அமைக்கப்பட வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் போட்டியை சமாளிக்கவேண்டுமென்றால், தூத்துக்குடி துறைமுகத்தை இன்னும் மேம்படுத்தி ஒரு பெரிய வர்த்தக துறைமுகமாக உருவாக்கும் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும். மேலும் பல துறைமுகங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும்.

Next Story