தமிழக அரசும் இதை பின்பற்றலாம்


தமிழக அரசும் இதை பின்பற்றலாம்
x
தினத்தந்தி 15 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-15T20:21:17+05:30)

நாட்டின் முன்னேற்றத்தில், வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டுமானால், நிச்சயமாக சிறப்பு கவனம் தேவை.

நாட்டின் முன்னேற்றத்தில், வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டுமானால், நிச்சயமாக சிறப்பு கவனம் தேவை. அந்தவகையிலான ஒரு நல்ல முயற்சியை, பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ளார். நாடுமுழுவதிலும் ஏழ்மை, மக்கள்நல்வாழ்வு, கல்வி, உள்கட்டமைப்பு போன்ற இனங்களில் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களை மத்திய அரசாங்கம் அடையாளம் கண்டு, அவற்றை முன்னேற்றுவதற்காக ஒரு சிறப்புத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக மத்திய அரசாங்கத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் சிறப்புத்திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாட்டில் பணிபுரிந்து, தற்போது மத்திய அரசாங்க பணியில் இருக்கும் பிரவீன்குமாரை விருதுநகருக்கும், எஸ்.கோபாலகிருஷ்ணனை ராமநாதபுரத்துக்கும் ‘பிரபாரி அதிகாரிகள்’ அதாவது சிறப்புப்பணி அதிகாரிகளாக மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது. இவர்களோடு இணைந்து பணியாற்ற தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், டாக்டர் சந்தோஷ்பாபுவை விருதுநகர் மாவட்டத்துக்கும் நியமித்துள்ளது. இந்த அதிகாரிகள் கடந்த 5–ந்தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்களை நடத்தினர். குழந்தை இறப்பு விகிதம், சுகாதாரம், ஊட்டச்சத்து, வறுமை ஒழிப்பு, கல்வி, வேளாண்மை, கழிப்பறைகளை பயன்படுத்துவது, தூய்மைப்பணிகள் என்பதுபோன்ற 20 அம்சங்களை வைத்து ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு இனத்திலும், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் மாவட்டத்தோடு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை ஒப்பிட்டு, அந்த இடத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மாவட்டங்களையும் கொண்டுவர என்னென்ன முனைப்பான திட்டங்களை நிறைவேற்றவேண்டும்? என்று விரிவான ஆலோசனை நடத்தினர்.

இந்த இரு மாவட்டங்களையும் அடுத்த 5 ஆண்டுகளில் 20 இனங்களிலும் முதல் மாவட்டத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை உடனடியாக தொடங்குவதற்காக முதல்கட்டமாக திட்டமிட்டனர். இதுமட்டுமல்லாமல், மத்திய–மாநில அரசு தீட்டியுள்ள திட்டங்களெல்லாம் இந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறதா?, அந்த திட்டங்களின் பலன்கள் இங்குள்ள கடைக்கோடி மக்களுக்கு போய்ச்சேருகிறதா?, அப்படி போய்ச்சேரவில்லையென்றால், என்ன முயற்சிகளுக்கு என்ன தடை இருக்கிறது?, எந்தெந்தவகையில் அதை கொண்டு போய் சேர்க்க வேண்டும்? என்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். மத்திய அரசாங்கத்தின் இதுபோன்ற முயற்சிகளை தமிழக அரசும் பின்பற்றலாம். தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்கள், 285 தாலுகாக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்களை பட்டியலிட்டு, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன வளர்ச்சி விகிதங்கள் குறைவாக இருக்கிறது? என்று ஆய்வு நடத்தி, எப்படி மழைவெள்ளம் ஏற்படுகின்ற நேரத்திலும், வறட்சி நேரங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக அரசு நியமிக்கிறதோ, அதுபோல பின்தங்கியுள்ள அனைத்து மாவட்டங்கள், தாலுகாக்கள், பஞ்சாயத்து யூனியன்களையும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டுவர இதுபோன்ற முயற்சிகளை தமிழக அரசு எடுத்தால், நிச்சயமாக மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழகம் உயரும். ஒட்டுமொத்த தமிழக மக்களும் அனைத்து வசதிகளையும் பெற்று உயர்வுநிலைக்கு வருவதற்கு இது துணைபுரியும்.

Next Story