கோவில்களின் பாதுகாப்பு


கோவில்களின் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 Dec 2017 9:30 PM GMT (Updated: 17 Dec 2017 11:25 AM GMT)

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதனால்தான், ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்’, ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என பழைய காலங்களில் இருந்து இன்றளவும் பேசப்படுகிறது.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதனால்தான், ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்’, ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என பழைய காலங்களில் இருந்து இன்றளவும் பேசப்படுகிறது. இந்தக் காரணங்களால்தான் எல்லா ஊர்களிலும் நிச்சயமாக ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இப்போது இந்துக்கோவில்கள் மிகமிக குறைவான எண்ணிக்கையில்தான் புதிதாக கட்டப்படுகிறது. ஆனால் இருக்கும் கோவில்கள் அனைத்தும் பழையகாலங்களில் கட்டப்பட்ட கோவில்களாகும். ஏராளமான கோவில்களுக்கு ஸ்தல புராணங்கள் இருப்பதால் எப்போது கட்டப்பட்டது என்பது தெரிகிறது. ஆனால் எல்லா கோவில்களுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 595 திருக்கோவில்கள் இருக்கின்றன. இதுதவிர, ஏராளமான சின்னஞ்சிறு திருக்கோவில்கள் இருக்கின்றன.

பல கோவில்களுக்கு முக்கால பூஜைகளுக்கு மட்டும்தான் பக்தர்கள் செல்கிறார்கள். ஆனால் அறுபடைவீடு, நவதிருப்பதி போன்ற பல பெரியகோவில்களுக்கு எந்தநேரத்திலும் பக்தர்கள் அலைஅலையாய் செல்கிறார்கள். திருவிழா நேரத்தில் வரும் கூட்டத்திற்கு அளவே இல்லை. தற்போது இந்த கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஒரு அச்சநிலை ஏற்பட்டுள்ளது. பண்டையகால கட்டுமானங்கள் மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், அதன்பிறகு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அந்தளவுக்கு வலுவாக இருக்குமா? என்பது சந்தேகம். சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரகார மண்டபத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபோல, கடந்த வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை கோவிலின் கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி நடைபெற்றபோது, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 2 பேர் ரமணர் ஆசிரமத்தின் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்து இருக்கிறார்கள்.

திருச்செந்தூர் சம்பவம் நடந்தவுடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படாதவகையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் கட்டிட ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய உடனடியாக களஆய்வு மேற்கொள்ளும்படி அறநிலையத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன்’ என்று கூறினார். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் வெறும் அறிவுரையாக மட்டும் கூறாமல், ஒரு காலக்கெடு நிர்ணயித்து அரசின் உத்தரவாக பிறப்பிக்கப்படவேண்டும். காரணம், ஆயிரக்கணக்கான கோவில்களை இவ்வாறு சோதனை செய்யும் பணி நடைபெற வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற ஆய்வுபணிகளில் உள்ளூர் பக்தர்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால், கடந்த மாதம் 22–ந்தேதி இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் திருச்செந்தூர் பிரகார மண்டபம் கான்கிரீட் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது என்ற ஒரு தகவலை முதல்–அமைச்சரிடம் மனுவாக வழங்கினார். அதில் அவர், ‘பிரகார மண்டபங்களை சிமெண்டால் கட்டாமல் கருங்கல் மண்டபமாக கட்டவேண்டும் என்ற ஆலோசனையும் கூறியுள்ளார்’. அதையும் அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு கோவில்களின் ஸ்திரத்தன்மையை பரிசோதனை செய்ய ஆங்காங்கு உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்களை பக்தர்களின் துணையோடு ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

Next Story