இனிப்பாக இருக்குமா மத்திய பட்ஜெட்?


இனிப்பாக இருக்குமா மத்திய பட்ஜெட்?
x
தினத்தந்தி 24 Jan 2018 9:30 PM GMT (Updated: 24 Jan 2018 12:48 PM GMT)

மத்திய அரசாங்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் 6 நாட்கள்தான் இருக்கிறது. மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி கடந்த சனிக்கிழமை பட்ஜெட் அச்சடிக்கும் பணிகளை அல்வா கிண்டி தொடங்கிவைத்தார்.

த்திய அரசாங்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் 6 நாட்கள்தான் இருக்கிறது. மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி கடந்த சனிக்கிழமை பட்ஜெட் அச்சடிக்கும் பணிகளை அல்வா கிண்டி தொடங்கிவைத்தார். இது ஒரு வித்தியாசமான நடைமுறை. ஒவ்வொரு ஆண்டும், இவ்வாறு நிதி மந்திரியால் அல்வா கிண்டியே தொடங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ‘நார்த்பிளாக்’ கட்டிடத்தின் தரைத்தளத்தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி ஒரு இரும்புக்கடாயில் அல்வா கிண்டி எல்லோருக்கும் கொடுத்ததும், ஏறத்தாழ 120 நிதிஅமைச்சக ஊழியர்கள் பட்ஜெட் அச்சடிக்கும் பணியை தொடங்கிவிட்டனர். பணி தொடங்கியவுடன் இந்த ஊழியர்களுக்கு வெளிஉலக தொடர்பே அற்றுப்போய்விடும். அவர்கள் செல்போன்கள் எல்லாம் வாங்கி வைக்கப்பட்டுவிடும். கடும் பாதுகாப்புடன் அவர்களால் இந்த 12 நாட்களும் இரவும்–பகலும் வெளியேபோகவும் முடியாது. வெளியே இருந்து யாரும் உள்ளே போகவும் முடியாது. பாராளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகுதான் அவர்களால் வெளியே வரமுடியும்.

இந்த ஆண்டு பட்ஜெட் பா.ஜ.க. அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான பட்ஜெட் ஆகும். ஏனெனில், 2019–ம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிற வேளையில், இந்த ஆண்டு பட்ஜெட்தான் முழுமையான பட்ஜெட் ஆகும். அந்தவகையில், 2014–ம் ஆண்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி முடிக்கவேண்டிய பட்ஜெட் இது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் பட்ஜெட்டில் எதிரொலிக்கப்படவேண்டும். 2022–ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிக்கு ஒரு செயல்வடிவம் இந்த பட்ஜெட்டில் காட்டப்பட்டாக வேண்டும். வருமானவரி சலுகைகள் நடுத்தர மக்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2014–ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரமேடைகளில் இந்த கருத்துதான் எதிரொலித்தது.

இப்போது பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறோம் என்று ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு பல்வேறு விருப்பங்களை பட்டியலிட்டு இருக்கிறது. அதில் மிகமுக்கியமான அம்சம் வருமானவரி கட்டவேண்டிய வரம்பு இப்போதுள்ள ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படவேண்டும். பல்வேறுவிதமான சேமிப்புகளில் ரூ.1½ லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வரிவிலக்கு என்ற வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படவேண்டும் என்பதுபோன்ற பல கருத்துக்களை வெளியிட்டுள்ளது. 2018–2019–ம் ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமான நாடாக இருக்கும். 2018–ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும். இது சீனாவின் வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கும் என்று உலகவங்கி கணித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறியீட்டில் சீனா, பாகிஸ்தான், ஏன் இலங்கையைவிட, இந்தியா பின்தங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இவ்வாறு இன்னும் பல உயர்வுகளை உருவாக்குவதோடு இல்லாமல், குறைகளையும் போக்கும்வகையில், மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தொடக்கத்தில் அல்வா கிண்டிய நிதிமந்திரி, அந்த அல்வாபோல ஒரு இனிப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆசை மட்டுமல்ல, எதிர்பார்ப்பாகவும் இருக்கும்.

Next Story