தமிழக மீனவர்களை நசுக்கும் இலங்கை சட்டம்


தமிழக மீனவர்களை நசுக்கும் இலங்கை சட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2018 9:30 PM GMT (Updated: 29 Jan 2018 5:26 PM GMT)

இலங்கை கடல்பகுதிக்குள் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு மிகஅதிகமான அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லங்கை பாராளுமன்றத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால் கடுமையான தண்டனை விதிக்கும்வகையில் ஒரு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் காலம்காலமாக பாக் ஜலசந்தியில்தான் மீன்பிடித்து வருகிறார்கள். 2009–ம் ஆண்டுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள், அதன்பிறகு இந்திய எல்லையைத்தாண்டி இலங்கை எல்லைக்குள் நுழைந்து தங்கள் மீன்வளத்தை அழித்துவிடுவதாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக அங்குள்ள தமிழ் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகள் மூலம் தமிழக மீனவர்கள், இலங்கை பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

இந்த மீனவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண இந்திய அரசாங்கமும், தமிழக அரசும் மிகத்தீவிரமான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும்நேரத்தில், கடந்தவாரம் புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை மீன்வளத்துறையின் 1979–ம்ஆண்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்வகையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல், எல்லோராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, இலங்கை கடல்பகுதிக்குள் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு மிகஅதிகமான அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

15 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.20 லட்சத்து 69,915–ம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.82 லட்சத்து 79,661–ம், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.4 கோடியே 13 லட்சத்து 98,305–ம், 45 மீட்டர் முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.6 கோடியே 20 லட்சத்து 97,487–ம், 75 மீட்டர் நீளத்திற்கும் அதிகமான படகுக்கு ரூ.7 கோடியே 24 லட்சத்து 47,033–ம் அபராதம் விதிக்கப்படலாம். சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனி இலங்கை பகுதிக்குள் பிடிபடும் தமிழக மீனவர்கள் அபராதம் செலுத்தாமல் திரும்பிவர முடியாது. 

தற்போது இலங்கை சிறையில் 120 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 127 மீன்பிடி படகுகள் இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் நிச்சயமாக தமிழக மீனவர்களை நசுக்கும் சட்டமாகத்தான் இருக்கும். இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்களை நீண்டகாலம் சிறையில் வைப்பதற்கும், அதிகளவில் அபராதத்தொகை வசூலிப்பதற்கும் ஏற்றவகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாமல் தடுக்கப்படவேண்டும் என்பது தமிழக அரசு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், தமிழக மீனவர்களின் கோரிக்கையாகும். மத்திய அரசாங்கம், தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இந்த சட்டத்தை அமல்படுத்தவேண்டாம் என்று உடனடியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழக மீனவர்கள் யாரும் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்காதவகையில் தொலைதூர ஆழ்கடலில்போய் பலநாட்கள் தங்கியிருந்து மீன்பிடிக்கும் வகையில் அவர்களுக்கு படகுகள் வாங்கவும், பயிற்சி அளிக்கவும் மிகவிரைவில் ஏற்பாடு செய்யவேண்டும்.

Next Story