தேர்தலுக்கான பட்ஜெட் இல்லை


தேர்தலுக்கான பட்ஜெட் இல்லை
x
தினத்தந்தி 1 Feb 2018 9:30 PM GMT (Updated: 1 Feb 2018 6:30 PM GMT)

ஒட்டுமொத்த இந்தியாவே மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த மத்திய அரசாங்க பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

ட்டுமொத்த இந்தியாவே மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த மத்திய அரசாங்க பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நிச்சயமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாகும். ஏனெனில், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கபோகும்நிலையில், பா.ஜ.க. அரசாங்கம் தாக்கல்செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான். எனவே, இந்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட்டாகத்தான் இருக்கும், மக்களை ஈர்க்கும்வகையில் இருக்கும். விவசாயிகள், ஏழை–எளிய மக்கள், நடுத்தர மக்கள், தொழில்முனைவோர் என ஒருதரப்பையும் பாக்கிவைக்காமல் எல்லோரையும் கவரும்வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட்டாக இல்லை. கிராமிய பொருளாதாரம், நலிந்தோருக்கான மருத்துவவசதி, மூத்த குடிமக்களுக்கான சில சலுகைகள், உள்கட்டமைப்பு வசதி, மாநில அரசுகளோடு இணைந்து தரமான ‘கல்வி வழங்கல் திட்டம்’ என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்கு நேரடியாக உடனடியாக பலன் அளிக்கும்வகையில் பல பெரியதிட்டங்கள் காணப்படவில்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது. வேளாண்மையை பொறுத்தமட்டில், ஒரு நல்ல உறுதிமொழி இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நிதிமந்திரி பேசும்போது, ‘‘எங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் உற்பத்திச்செலவிற்கு 50 சதவீதத்திற்குமேல் அவர்களுக்கு விலை கிடைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அதாவது, அவர்கள் உற்பத்தி செலவுக்குமேல் 1½ மடங்கு விலை கிடைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். இதில் அரசு மிகவும் கவனமாக இருந்தது. பெரும்பாலான ‘ரபி’ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அவர்கள் உற்பத்திச்செலவுக்குமேல் 1½ மடங்கு அதிகமாக இருக்கும்நிலையில் நிர்ணயிக்கப்பட்டது. அரசு இப்போது அறிவிக்கப்படாத அனைத்து ‘கரீப்’ பயிர்களுக்கும் உற்பத்திசெலவில் 1½ மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க திட்டமிட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பெரிய அளவில் குறிப்பிட்டுச் சொல்லும்வகையில் எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ரெயில்வே திட்டங்களிலும் பெரியஅளவில் இல்லை என்பது மக்களுக்கு சற்று அதிருப்தியை தருகிறது. விவசாய கடன்களுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதும், பெண்கள் சுயஉதவி குழுக்களுக்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதும், மருத்துவம், கல்வி, சமூகபாதுகாப்புக்காக ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.5 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.

நடுத்தர மக்கள் வருமான வரிச்சலுகை நிச்சயமாக அறிவிக்கப்படும் என்று வெகுஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், கூடுதலாக வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வரிச்சலுகை கொடுக்காமல் இப்போது அவர்கள் கட்டும் 3 சதவீத மேல்வரிக்கு பதிலாக, சுகாதாரம் மற்றும் கல்வி மேல்வரி என்று 4 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக ஒரு பெரிய சுமைதான். இதுதவிர நிறையபொருட்கள் விலை உயரும் அபாயமும் இருக்கிறது. சேமிப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் இல்லை. புதிதாக நீண்டகால மூலதன ஆதாயவரி வசூலிக்கப்படுவது, பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கும். மொத்தத்தில், ‘நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று’ என்றுதான் இந்த பட்ஜெட்டைப்பற்றி கூறவேண்டியதிருக்கிறது.

Next Story