ரவுடிகள் இல்லாத தமிழ்நாடு


ரவுடிகள் இல்லாத தமிழ்நாடு
x
தினத்தந்தி 9 Feb 2018 9:30 PM GMT (Updated: 9 Feb 2018 4:58 PM GMT)

‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டத்தில் வில்லனை காப்பாற்றுவதற்காக நகரில் உள்ள அனைத்து ரவுடிகளும் ஒரே இடத்தில் குவிந்து இருப்பார்கள்.

‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டத்தில் வில்லனை காப்பாற்றுவதற்காக நகரில் உள்ள அனைத்து ரவுடிகளும் ஒரே இடத்தில் குவிந்து இருப்பார்கள். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது புத்தாண்டு புலரும். ரவுடிகளை சுட்டு வீழ்த்திய போலீசார் அனைவரும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து கூறுவார்கள். அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு, நிஜவாழ்க்கையிலும் நமது போலீசார் துணிச்சலுடன் இதுபோன்ற சாகசத்தை செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு நிறையபேர் சினிமா கொட்டகையைவிட்டு வெளியே வந்தது உண்டு. திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் தமிழக போலீசார் இதை செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டும் ஒரு ‘வீரசம்பவம்’ சென்னையில் நடந்திருக்கிறது. பினு என்ற பெரிய ரவுடி தன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தார். சென்னையில் உள்ள முன்னணி ரவுடிகள், தாதாக்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து ஆடல்–பாடல், மதுவிருந்துடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

பூந்தமல்லி, மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் ஒரு லாரி ஷெட்டில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு வந்த பல்லு மதன் என்ற ரவுடி, வழியில் போலீசாரிடம் மாட்டியநேரத்தில் உண்மையை கக்கிவிட்டார். உடனடியாக போலீஸ் மின்னல் வேகத்தில் செயல்பட்டது. அதிகாரிகளும், போலீசாருமான 40 பேர் கொண்ட படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. பினு பட்டா கத்தியைக் கொண்டு கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்து முடித்து, மதுவிருந்து தொடங்கியபோது போலீசார் ரவுடிகளை மடக்கிப்பிடித்தனர். பின்னர் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதெல்லாம் பாராட்டத்தக்க வி‌ஷயம் என்றாலும், இந்த கும்பலின் தலைவரான பினு, விக்கி, கனகு ஆகிய 3 பேரும் தப்பிவிட்டனர். இந்த ரவுடிகளில் பலர் வக்கீல், பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார்கள். போலீசார் இந்த அடையாள அட்டைகளின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். போலி அடையாள அட்டைகளை வைத்து சமுதாயத்தில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்களை களையெடுக்கவேண்டும்.

இவ்வளவு ரவுடிகள் பெருகும் அளவில் போலீசார் இதுவரை விட்டு வைத்தது ஒரு குறையாக இருக்கிறது. இதுபோன்ற ரவுடிகள் மீது உள்ள வழக்குகள் உடனடியாக புலன்விசாரணை செய்யப்பட்டு உடனுக்குடன் தண்டனை வாங்கிக்கொடுத்தால், இவர்களெல்லாம் நாட்டில் நடமாடமாட்டார்கள். இந்த வேட்டையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ரவுடி ஒழிப்பு போலீசார் முக்கிய பங்காற்றினர். அவர்கள்தான் இதுபற்றிய தகவலை சேகரித்து போலீஸ் கமி‌ஷனருக்கு தெரிவித்தனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உடனடியாக தனி போலீஸ் படையை அமைத்து அங்கு செல்ல வைத்தார். இதில் வரவேற்கத்தக்க வி‌ஷயம் பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது. இதுபோல, சென்னை நகரில் உள்ள 678 ரவுடிகள் பட்டியலை எடுத்து அவர்களை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் சாம்ராஜ்யத்தை பூண்டோடு ஒழிக்க சென்னை போலீஸ் கமி‌ஷனரும் மற்றும் அதிகாரிகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒரு பெரிய ‘சல்யூட்’ அடிக்கிறார்கள். இதையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட போலீசார் தங்கள் மாவட்டங்களையும் ரவுடிகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

Next Story