மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாக்கப்பட வேண்டும்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 14 Feb 2018 9:30 PM GMT (Updated: 14 Feb 2018 5:09 PM GMT)

இந்து சமயத்தினருக்கு முக்கியமான திருக்கோவில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன்– சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். ஏறத்தாழ 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.

ந்து சமயத்தினருக்கு முக்கியமான திருக்கோவில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன்– சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். ஏறத்தாழ 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. ‘சித்திரை திருவிழா’ போன்ற முக்கிய திருவிழா நேரங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலுக்கு உள்ள தனிச்சிறப்பு 4 திசைகளிலும்,

4 கோபுரங்கள் இருப்பதுதான். இதுபோல, மீனாட்சி அம்மனுக்கு தனி சன்னதியும், சுந்தரேஸ்வரருக்கு தனி சன்னதியும் உண்டு. இந்த கோவிலுக்குள் நுழைய

4 நுழைவுவாயில்கள் இருக்கிறது. என்றாலும் ராஜ கோபுரம் என்று அழைக்கப்படும் கிழக்கு கோபுரம்தான் பக்தர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் நுழைவுவாயில் ஆகும். கிழக்கு கோபுரம் பகுதியில் எல்லோரும் வெகுநேரம் நின்று ரசித்து பார்க்கும்வகையில் கலைநுட்பங்களோடு கூடிய சிற்பங்கள் கொண்ட ‘ஆயிரங்கால்’ மண்டபம் இருக்கிறது. இந்த ‘ஆயிரங்கால்’ மண்டபத்தில் 150–க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடந்த 2–ந்தேதி இரவு ஏற்பட்ட

தீ விபத்தில் 35 கடைகள் முழுமையாக எரிந்துவிட்டன. ஏதோ தீ விபத்து ஏற்பட்டது கடைகள் எரிந்தன என்றநிலையில், பக்தர்கள் சமாதானம் அடைந்து விடவில்லை. தங்கள் வீட்டில் ஒரு அபசகுனம் நடந்தது போல, துடிதுடித்து போய் அழுதார்கள். ஏனெனில், இந்த கோவிலின் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் இப்படி தீ விபத்து நடந்ததே இல்லை. வரலாற்றைப் பார்த்தால், பல மன்னர்கள் இந்த கோவிலுக்கு ஒவ்வொருவிதமான வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இப்போது

தீ விபத்து நடந்த கிழக்கு கோபுரம் மன்னர் சுந்தரபாண்டியன் காலத்திலும், மேற்கு கோபுரம் பராக்கிரம பாண்டிய மன்னர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர், ‘இந்த கோவிலின் பராமரிப்பிற்காக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, அவ்வப்போது கோவிலின் ஸ்திரத்தன்மையை ஆராயவேண்டும். கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் களையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ பயன் படுத்துவது தடைசெய்யப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்புபடை கோவிலின் பாதுகாப்பை கவனிப் பதற்காக நிறுத்தப்பட வேண்டும். கோவிலில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், போதுமான அளவில் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்படவேண்டும். தீ விபத்து நடந்தாலோ அல்லது இதுபோல அவசர நேரங்களிலோ எப்படி நிலைமையை கட்டுப்படுத்துவது என்ற பயிற்சிகளை கோவில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இங்கு மட்டுமல்லாமல், அனைத்து கோவில்களிலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படாமல் தடுக்க இப்போதுள்ள மின்சார வயர்களை மாற்றி, புதிய மின்சார வயர்களை பொருத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர். நிச்சயமாக இந்த தீர்ப்பு அரசாங்கத்தால் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய தீர்ப்பாகும். இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருக்கோவில்களில் விபத்துகள் தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிறப்பித்துள்ள உத்தரவுகள் நிச்சயமாக பலன் அளிக்கும். இது உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும்.

Next Story