தொழில் அதிபர்களுடன் சந்திப்பு


தொழில் அதிபர்களுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 18 Feb 2018 9:30 PM GMT (Updated: 18 Feb 2018 11:34 AM GMT)

தமிழ்நாட்டில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தொழில்வளர்ச்சி பின்தங்கி விட்டது என்ற குறை எல்லோருக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தொழில்வளர்ச்சி பின்தங்கி விட்டது என்ற குறை எல்லோருக்கும் உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தொழில் முனைவோரை தங்கள் பக்கம் ஈர்க்க பெரிய போட்டியே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் எல்லாம் இப்போது புதிய தொழில்கள் தங்கள் மாநிலங்களில் தொடங்கப்படவேண்டும் என்பதில் மிகவும் முனைப்புடன் செயல்படத் தொடங்கி விட்டன. ஆந்திராவை எடுத்துக்கொண்டால், சென்னையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தும் வகையில், தமிழக எல்லையிலேயே அனைத்து தொழில் பூங்காக்களையும் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், தொழில் அதிபர்களுக்கு ஒரு பெரிய குறையாக இருந்தது, தமிழக அரசின் சார்பில் எங்களை யாரும் சந்திப்பதில்லை. தொழில் தொடங்குவதற்கு எங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? என்பதை யாரும் கேட்பதில்லை என்பதுதான்.

2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா நடத்திய இறுதி பேரூரையில், ‘‘ஒவ்வொரு முதலீட்டிற்கும் தேவையான ஆவணங்களுடன் ஒற்றைச்சாளர ஒப்புதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டுக்கான விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களையும் வழங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என நான் உறுதி கூறுகிறேன்’’என்று அறிவித்தார். ஆனால், அதன்பிறகு தொழில் தொடங்க முயற்சிக்கும் தொழில்கள் இந்தவசதிகளை பெறவில்லை என்ற ஒரு கவலை இருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வணிக எளிதாக்குதல் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘விண்ணப்பித்த 29 நாட்களில் எந்தத்தொழிலுக்கும் ஒப்புதலைப்பெறலாம்’ என்று அறிவித்திருந்தார். பொதுவாக இதுபோன்ற ஒப்புதலுக்கு செல்லும்போது சி.எம்.டி.ஏ, நகர ஊரமைப்புத்துறை ஒப்புதல், மாசுகட்டுப்பாடு வாரியம், மின்சார வாரிய ஒப்புதலுக்கு 2 ஆண்டுகள்வரை ஆகிறது என்ற குறை தொழில் அதிபர்களுக்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு முதல்–அமைச்சர், தொழில் அதிபர்களை எல்லாம் சந்தித்து அவர்களின் ஆலோசனையை கேட்டது, தொழில் அதிபர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அப்போது 2 ஆண்டுகள் ஒப்புதலுக்கு ஆகும் பல துறைகளின் ஒப்புதலை இந்த 29 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற சட்டத்தில் சேர்த்துவிடலாம் என்று முதல்–அமைச்சர் உறுதி அளித்தார் என்று தொழில் அதிபர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.

தொழில்அதிபர்கள், முதல்–அமைச்சர் சந்திப்பின் எதிரொலியாக 5 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் முன்வந்துள்ளன. புதிதாக தொழில் தொடங்குவது சம்பந்தமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விரும்பும் தொழில் அதிபர்கள் ஒரு நாளைக்கு முன்னால் தெரிவித்தால் போதும், அடுத்த நாள் சந்திக்கலாம் என்று அறிவித்துள்ளார். இது ஒரு நல்லதொடக்கம். இதுபோல முதல்–அமைச்சரும், உயர் அதிகாரிகளும் அடிக்கடி தமிழ்நாட்டில் உள்ள, வெளிமாநிலங்களிலுள்ள, வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோர்களை சந்தித்து இவ்வாறு ஒற்றை சாளர முறையில் அனைத்து ஒப்புதல்களையும் பெற தமிழ்நாட்டில் உள்ள வசதிகளை எடுத்துக்கூறினால், தமிழ்நாட்டில் தொழில்வளமும், வேலைவாய்ப்புகளும் பெருகும். மாநிலமும் வளம் பெறும்.


Next Story