கேட்டது ரோஜாப்பூ; கிடைப்பது தாள்ப்பூவா!


கேட்டது ரோஜாப்பூ; கிடைப்பது தாள்ப்பூவா!
x
தினத்தந்தி 26 March 2018 10:00 PM GMT (Updated: 26 March 2018 5:50 PM GMT)

மேற்பார்வை ஆணையம் என்று அமைக்கப்பட்டால், தமிழக அரசு கேட்டது ரோஜாப்பூ; கிடைக்கப்போவதோ மணம் இல்லாத தாள்ப்பூ என்றுதான் சொல்லமுடியும்.

ரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைத்திட மத்திய அரசாங்கத்திற்கு, தமிழக அரசு போதிய அழுத்தம் தரவேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத்தீர்மானத்தை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘காவிரி நதிநீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம். விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்டக்களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்’ எனவும் பேசினார். நீண்ட நெடுங்காலமாக முடிவு காணப்படாமல் ரப்பர்போல இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை ஒன்று உண்டு என்றால், அது காவிரி நதிநீர் பிரச்சினைதான். 2007–ம் ஆண்டு நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பு செயல்படுத்தப்படாத நிலையில், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16–ந்தேதி அளித்த தீர்ப்பில், ‘6 வாரங்களுக்குள் அதாவது, 30–ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில தலைமைச்செயலாளர்கள் கூட்டத்தை கடந்த 9–ந்தேதி கூட்டி விவாதித்தார். இதில், கர்நாடக மாநிலத்தின் சார்பில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை, எனவே, தீர்ப்பை செயல்படுத்துவது குறித்த செயல்திட்டம் பற்றி விவாதிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக தலைமைச்செயலாளர் பேசும்போது, காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில், குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையைத்தான் உச்சநீதிமன்றம் செயல்திட்டம் என்று குறிப்பிட்டுள்ளது என்று ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினார். ஆனால், தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், மத்திய நீர்வளத்துறை, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் இந்த மேற்பார்வை ஆணையம், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 5 முழுநேர உறுப்பினர்கள், 4 மாநிலங்களையும் சேர்ந்த தலா ஒரு பகுதிநேர உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டதாக இருக்கும். குழுத்தலைவராக ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது நீர்ப்பாசனத்துறையில் அனுபவம்வாய்ந்த முதன்மை பொறியாளர் அல்லது காவிரி நதிநீர் பங்கீட்டில் அனுபவம்வாய்ந்த தொழில்நுட்ப நிபுணரை நியமிக்கலாம் என்று அறிக்கை தயாரித்திருப்பதாக பரவலான கருத்துகள் வெளியாகியுள்ளன.

அத்தகைய அறிக்கையை மத்திய அமைச்சரவை பரிசீலிக்க இருக்கிறது. அப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், வேறுபெயரில் மேற்பார்வை ஆணையம் என்று அமைக்கப்பட்டால், தமிழக அரசு கேட்டது ரோஜாப்பூ; கிடைக்கப்போவதோ மணம் இல்லாத தாள்ப்பூ என்றுதான் சொல்லமுடியும். ரோஜாப்பூவை எந்தப்பெயரிட்டு அழைத்தாலும், மணம் மாறாது. ஆனால், இப்படி அமைக்கப்பட்டால் ரோஜாப்பூ மணம் இருக்காது, அதிகாரம் இல்லாத தாள்ப்பூவாகத்தான் இருக்கும். மேற்பார்வை ஆணையத்திற்கு நிச்சயமாக மேலாண்மை வாரியத்திற்குள்ள அதிகாரங்கள் இருக்காது. மேற்பார்வையிடும் அவ்வளவுதான். எனவே, இந்த முடிவு அறிவிக்கப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் வாயிலாக தீர்வுகிடைக்குமா? என்பதை ஆராய சிறந்த சட்டநிபுணர்கள் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவை அரசு அமைத்து ஆலோசனை நடத்தவேண்டும்.

Next Story