தூங்கும் நீதிமன்ற உத்தரவுகள்


தூங்கும் நீதிமன்ற உத்தரவுகள்
x
தினத்தந்தி 13 April 2018 9:30 PM GMT (Updated: 13 April 2018 5:29 PM GMT)

உலகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ‘ரிப் வான் விங்கிள்’ என்ற ஆங்கில கதை கற்பிக்கப்படுகிறது. ‘ரிப் வான் விங்கிள்’ ஒரு பெரிய சோம்பேறி.

லகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ‘ரிப் வான் விங்கிள்’ என்ற ஆங்கில கதை கற்பிக்கப்படுகிறது. ‘ரிப் வான் விங்கிள்’ ஒரு பெரிய சோம்பேறி. எந்த வேலையையும் செய்யாமல் குழந்தைகள் பிறந்தபிறகும், ஊர் சுற்றிக்கொண்டே ஜாலியாக இருந்தார். ஒருநாள் அவர் மனைவி அதிகமாக திட்டியவுடன், ‘ரிப் வான் விங்கிள்’ கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றி அலைந்தார். அப்போது மதுபான பீப்பாயை சுமந்துகொண்டு ஒரு முதியவர் நடந்துபோனார். அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் எதிரொலியாக, ‘என்னோடு மலைக்கு வருகிறாயா?’ என்று கேட்டவுடன், ரிப் வான் விங்கிள் அந்த பீப்பாயை தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றார். 

மலையில் ரிப் வான் விங்கிள் மதுவை குடித்துவிட்டு தூங்கிவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்த அவர், நீண்ட தாடியுடன் இருப்பதை உணர்ந்தார். ஆடைகளெல்லாம் கந்தலாக இருந்தது. மேலும் தன் அருகில் இருந்த துப்பாக்கி துருப்பிடித்து தகரமாக கிடப்பதை பார்த்து விட்டு, மலையில் இருந்து கீழே இறங்கிவந்து பார்த்த போது யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் 20 ஆண்டுகள் தூங்கி இருக்கிறார். இதே கதையை சென்னை ஐகோர்ட்டில் அரசு ஆணைகளை நிறை வேற்றாத அதிகாரிகளை தொடர்புபடுத்தி, நீதிபதி என்.கிருபாகரன் கூறியிருக்கிறார். 6 ஆசிரியர் களுக்கு பணிநியமனம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமலும், அதை எதிர்த்து அப்பீல் செய்யாமல் இருந்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இதேநிலை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றம் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடும். இது நல்லதல்ல என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். உயர்நீதிமன்றம்தான் மாநிலத்தில் உயர்ந்த நீதிமன்றம் ஆகும். உயர்நீதிமன்ற உத்தரவுகளையே அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால், கீழ்கோர்ட்டு உத்தரவுகள் என்னவாகும் என்று கூறியிருக்கிறார். 

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறை வேற்றாததால், கடந்த 17 ஆண்டுகளில் 30 ஆயிரத்து 840 அவமதிப்பு வழக்குகளும், 2016–ம் ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 132 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அரசு ரீதியாக அனைத்து முயற்சி களையும் எடுத்து நிறைவேறாத பிறகுதான், உயர்நீதி மன்ற கதவுகளை தட்டுகிறார்கள். அந்த தீர்ப்பும் நிறைவேற்றப்படவில்லை என்றால் வேறு எங்கு செல் வார்கள்?. ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணை யான காவிரி நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு நம்பிக்கை இல்லாதநிலை இருக்கிறது. பொதுவாக நீதிமன்ற தீர்ப்புகள் கொஞ்சநாள் அதிகாரிகளால் நிறைவேற்றப் படும். பிறகு அது நிறைவேற்றப்படு வதில்லை. இந்த நிலையை தவிர்க்க, சென்னை ஐகோர்ட்டு இதற்கென தனியாக ஒரு பதிவாளரை நியமித்து, நீதிமன்ற தீர்ப்புக ளெல்லாம் நிறைவேற்றப் படுகிறதா? என்று பார்க்க வேண்டும். அரசு துறைகளிலும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் அதுகுறித்து ஒருநிலை ஆணை பிறப்பிக்கலாம். அரசு விதிகளில் திருத்தம் கொண்டுவரலாம். தேவைப் பட்டால் சட்டத்திருத்தமும் கொண்டுவரலாம். நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப் படுகிறதா? என்று பார்க்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கலாம். இதில் அரசு முன்உதாரணமாக திகழ வேண்டும். தீர்ப்புகள் நிறை வேற்றப்படமுடியாது என்றால், உடனடியாக மேல்கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.

Next Story