சரிந்துவரும் அன்னிய முதலீடு


சரிந்துவரும் அன்னிய முதலீடு
x
தினத்தந்தி 16 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-16T18:22:36+05:30)

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைதூக்கிவிட்டது. வேலைதேடித்தரும் அலுவலகத்திலேயே 80 லட்சம் பேருக்கு மேல் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

மிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைதூக்கிவிட்டது. வேலைதேடித்தரும் அலுவலகத்திலேயே 80 லட்சம் பேருக்கு மேல் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். இதுதவிர, பதிவு செய்யாதவர்கள் கணக்கை எடுத்துக்கொண்டால் இன்னும் அதிகமாக இருக்கும். வேலைவாய்ப்பும், உற்பத்தி வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமென்றால், தொழில்வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டும். தொழில் வளர்ச்சியால் உற்பத்தி அதிகரிக்கும்போது அரசுக்கு வருவாயும் பெருகும். வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும்போது, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகமாக இருக்கும். இதன்காரணமாக வர்த்தகமும் தழைக்கும். ஆக, அனைத்திற்கும் மூலக்காரணமாக இருப்பது தொழில் வளர்ச்சி தான். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ‘ஓடு மீன் ஓட, உறுமீன் வருமளவும் காத்து நிற்குமாம் கொக்கு’ என்பார்கள். அந்த கொக்குபோல ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நின்றுகொண்டு பெரிய அளவிலான தொழில் முதலீடுகளையெல்லாம் தன்மாநிலத்திற்கு கொத்திக்கொண்டு போய்விடுகிறார். நிறைய புதிய தொழிற்சாலைகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பெரிய தொழிற்சாலைகள், விரிவாக்கத்திட்டங்கள் ஆந்திராவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘போர்டு’, ‘ஹூண்டாய்’, ‘சாம்சங்’, ‘டெல் கம்ப்யூட்டர்’ போன்ற நிறுவனங்களுக்கு நிகராக வேறெந்த பெரிய தொழிற்சாலைகளும் இப்போது தமிழ்நாட்டில் தொடங்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் அன்னிய தொழில்முதலீடுகளும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதும் குறைந்து கொண்டே வருகிறது. 2008–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் குஜராத் மாநிலத்தில் ரூ.680 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ரூ.552 லட்சம் கோடியும், கர்நாடக மாநிலத்தில் ரூ.482 லட்சம் கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வசதிகளையும் கொண்ட, இவ்வளவு காலமும் எல்லா தொழில் முதலீடுகளிலும் முதலிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் ரூ.211 லட்சம் கோடி மட்டுமே முதலீடாக கிடைத்துள்ளது. நிச்சயமாக இந்த முதலீட்டு கணக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. 

2016–2017–ல் உற்பத்தி வளர்ச்சியும், அன்னிய முதலீடுகளும் பெருமளவில் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 0.79 சதவீதம்தான். இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில் இப்போது சொந்த வரி வருவாய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆண்டு, அதாவது 2017–2018–ம் நிதிஆண்டின் தமிழகத்தின் வரிவருவாய் 10.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு பெட்ரோல்–டீசல் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 30 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சொந்த வரிவருவாய் 2017–2018–ல் ரூ.93 ஆயிரத்து 795 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு சேவைவரி வசூல், முத்திரைத்தாள் வசூல் ஆகியவற்றின் வசூலும் உயர்ந்திருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டிய நிதிஉதவியில், உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.1,950 கோடி நிச்சயமாக குறையும். வரிவருவாய் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், அதற்கேற்றவகையில் தொழில்வளர்ச்சியிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வேலைவாய்ப்பை பெருக்குவதிலும், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தீவிரமாக அக்கறை காட்டவேண்டும்.

Next Story