மகிழ்ச்சி! ஆனால், இன்னும் வேண்டும்...


மகிழ்ச்சி! ஆனால், இன்னும் வேண்டும்...
x
தினத்தந்தி 4 Jun 2018 7:38 PM GMT (Updated: 4 Jun 2018 7:38 PM GMT)

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்தநாட்டின் ஜி.டி.பி. என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில்தான் இருக்கிறது. இந்தவகையில், இந்த நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா சந்தித்துக்கொண்டிருந்தது.

கடந்த 2016-2017-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.3 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 7 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால் ஏற்பட்ட விளைவுகள், சரக்கு சேவைவரியின் தொடக்ககால பாதிப்பு ஆகியவையே கூறப்பட்டது. ஆனால், இப்போது இதையெல்லாம் மீறி கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 4-வது காலாண்டில் 7.7 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்துள்ளது. சீனாவே 6.8 சதவீத வளர்ச்சியைத்தான் கண்டிருக்கும் நிலையில், சீனாவைவிட நமது உள்நாட்டு உற்பத்தி வளர்ந்திருக்கிறது என்பது நிச்சயமாக மகிழ்ச்சிதரும் செய்திதான். ஆனால் இந்த ஆண்டு முழுமைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என்றுதான் கணக்கிடப்பட்டுள்ளது.

2016-17-ல் உள்ள 7.1 சதவீத வளர்ச்சியை கணக்கிட்டால் நிச்சயமாக இது குறைந்த பொருளாதார வளர்ச்சிதான். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியாகும். இது எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் உண்மையான வளர்ச்சியை குறிப்பிடும் ‘கிராஸ் வேல்யூ ஆட்’ என்று கூறப்படும் ஜி.வி.ஏ.யோடு மொத்த வரி வருமானத்தைக்கூட்டி மானியங்களை கழித்துவரும் விகிதத்தைத்தான் ‘ஜி.டி.பி.’ என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக கூறுகிறோம். ஆக, மானியங்கள் அதிகரிக்க அதிகரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும், மானியதொகை குறைய மொத்த உள்நாட்டு வளர்ச்சி அதிகரிக்கும். இப்போது உற்பத்தி, கட்டுமான தொழிலில் வளர்ச்சி இருந்தாலும் விவசாயம், சுரங்கதொழில் சரிந்துள்ளது. கடந்த 6 மாதகாலத்தில் 35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிதிஆயோக் கூறுகிறது. நிச்சயமாக இது போதாது. ஆண்டுக்கு குறைந்தது ஒரு கோடி புதியவேலை வாய்ப்புகளாவது உருவாக்கப்படவேண்டும்.

இனிவரும் காலக்கட்டங்களில் அரசு மிகவும் கவனமாக திட்டமிட்டு செயல்படவேண்டும். ஏனெனில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துகொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் நிச்சயமாக விலைவாசி உயரும். விலைவாசி உயரும் நேரத்தில், வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு வரும். இதன்காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்படும். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.29 ஆயிரத்து 714 கோடி முதலீட்டை நமது பங்கு மார்க்கெட்டில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள். கடந்த 18 மாதங்களில் இல்லாத வகையில், இப்போதுதான் இவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியே போயிருக்கிறது. ஆக மொத்தத்தில், கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும், அடுத்து வரும்காலங்களில் மிகவும் கவனமாக அரசு இதே உயரத்தை மேலும் எடுத்துச்செல்ல முனைப்பை காட்டவேண்டும் என்பதுதான் நிதர்சன உண்மையாகும்.

Next Story