எங்களுக்கு மானியம் வேண்டாம்


எங்களுக்கு மானியம் வேண்டாம்
x
தினத்தந்தி 19 Jun 2018 9:30 PM GMT (Updated: 19 Jun 2018 6:25 PM GMT)

அனைத்து வீடுகளிலும் சமையல் கியாஸ்தான் பயன்படுத்தவேண்டும். குறிப்பாக ஏழை–எளிய மக்களுக்கு இதுவொரு ஆடம்பர சாதனமாக இருக்கக்கூடாது.

னைத்து வீடுகளிலும் சமையல் கியாஸ்தான் பயன்படுத்தவேண்டும். குறிப்பாக ஏழை–எளிய மக்களுக்கு இதுவொரு ஆடம்பர சாதனமாக இருக்கக்கூடாது. அத்தியாவசிய சாதனமாக இருக்கவேண்டும் என்பது பிரதமரின் நோக்கம். எனவே, வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச்சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமர் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின்கீழ் 2016–17–ல் 3.31 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும், 2017–18–ல் 2.82 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டன. இந்தத்திட்டத்துக்கான இலக்கு 8 கோடி இணைப்புகளாகும். தற்போது மானியம் இல்லாமல் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.712.50 ஆகும். இதற்காக ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் போடப்படும் மானியத்தொகை ரூ.230.66 ஆகும். ஏற்கனவே இதுபோன்ற மானியச்சுமைகளால் மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்காக செலவிடமுடியாமல் நிதிப்பற்றாக்குறையால் மத்திய அரசாங்கம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 

கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் 27–ந்தேதி டெல்லியில் நடந்த உலகளாவிய எரிசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி, வசதி படைத்தவர்கள் ‘தங்களுக்கு மானியம் வேண்டாம்’ என்று விட்டுக்கொடுத்தால், அதனால் கிடைக்கும் நிதியைக்கொண்டு ஏழை மக்களின் நலனுக்காக செலவழிக்க முடியும். வசதியில்லாத ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கமுடியும் என்பதுபோன்ற கருத்துகளை தெரிவித்தார். 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் சராசரியாக 4 சதவீதம்பேர்தான் எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று சொல்லியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரம் மக்களை நிச்சயமாக பாராட்டவேண்டும். மிசோரமில் 14 சதவீத மக்கள் தங்களுக்கு மானியம் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். டெல்லி, நாகலாந்தில் 12 சதவீதமும், மணிப்பூரில் 10 சதவீதமும் மானியம் தேவையில்லை என்று பெரியமனதுடன் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம் என்னவென்றால் பீகார், சத்தீஸ்கார், தமிழ்நாட்டில் 3 சதவீதம் பேரும், மேற்குவங்காளத்தில் 2 சதவீதம் பேரும், ஆந்திராவில் ஒரு சதவீதம் பேரும் மட்டுமே எங்களுக்கு மானியம் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். 

பிரதமரின் மாநிலமான குஜராத்தில் கூட 4 சதவீதம் பேர்தான் மானியம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தத்திட்டத்தை பிரதமர் அறிவித்து ஒரு ஆண்டில் அதாவது 2016–ல் 1 கோடி பேர் மானியம் வேண்டாம் என்று சொன்னநிலையில், அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளில் 4 லட்சம்பேர்தான் மானியம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், மக்களுக்கு இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய முனைப்பில் மத்திய அரசாங்கம் இன்னும் தீவிரம் காட்டவேண்டும். மானியம் வாங்குவது வசதிபடைத்தவர்களுக்கு கவுரவக்குறைவு என்ற உணர்வை நிச்சயமாக ஏற்படுத்தவேண்டும். ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுகிறவர்கள் என்றவகையில் வருமான வரி கட்டுபவர்களுக்கு ஏற்கனவே இந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல, மேலும் பல அளவீடுகளை வைத்து மானியத்தை ரத்துசெய்யலாம். ஆனால், எங்களுக்கு மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று சொல்லும் இந்தத்திட்டத்தின் பலன் தானாகவே முன்வந்து பொதுமக்கள் விட்டுக்கொடுப்பதில்தான் இருக்கிறது. மானியம் வேண்டாம் என்று சொல்லும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனம் முன்னுரிமை கொடுத்து பதிவு செய்தவுடன் கியாஸ் சிலிண்டர் வழங்கினால் நிச்சயமாக ஏராளமான பேர் முன்வருவார்கள்.

Next Story