எல்லா ஆசிரியர்களும் இவரைப்போல ஆகவேண்டும்


எல்லா  ஆசிரியர்களும் இவரைப்போல ஆகவேண்டும்
x
தினத்தந்தி 24 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-24T17:45:30+05:30)

கடந்த வாரத்தில் தந்தி டி.வி.யில் காட்டப்பட்ட ஒருகாட்சி, எல்லோருடைய மனதையும் உருக்குவதாகவும், ஆசிரியர் பணிமீது அபரிமிதமான மரியாதையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

ஆசிரியர் பணி பகவானுக்கு இணையான பணி. அந்தவகையில், தன் பெயரிலும் பகவான் என்பதைக்கொண்ட ஒரு ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவரையும் பகவான் பக்தர்களை காத்து அரவணைப்பதுபோல, மிக அன்பொழுக பழகி, ஆங்கில மொழியை சாதாரண கிராம, ஏழை–எளிய மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிதாக சொல்லிக்கொடுத்தவர். அந்த பள்ளிக்கூட மாணவர்களை ஆங்கில பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறவைத்தார். அவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் என்ற ஊரிலுள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மாணவ–மாணவிகள் அனைவரும் தன் குடும்பத்தில் ஒருவரை பிரிவதுபோல, சோகக்கடலில் மூழ்கி பணிவிடுவிப்பு வாங்கவந்த ஆசிரியர் பகவானை வெளியே செல்லவிடாமல் சுற்றி வளைத்துக்கொண்டு, ‘நீங்கள் போகக்கூடாது, போகக்கூடாது’ என்று கதறி அழுததும், தன் மாணவ செல்வங்களின் கண்ணீரைப்பார்த்து, ஆசிரியர் பகவானும் கண்ணீர் வடித்ததும் தந்தி டி.வி.யில் பார்த்தவர்கள் கண்களில் எல்லாம் கண்ணீரை வரவழைத்தது. இப்போது கல்வித்துறை அவரது இடமாறுதலை 10 நாட்கள் நிறுத்திவைத்திருக்கிறது.

இந்தியா முழுவதும் ஆசிரியர் பகவான்மீது, மாணவர்கள் கொண்டிருந்த இந்த அன்புசெயல் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகிறார்கள். தமிழகத்துக்கே ஆசிரியர் பகவானின் செயல் பெருமைத்தேடி தந்துவிட்டது. மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆசிரியர் பகவானை இன்னும் சில ஆண்டுகள் அதேப்பள்ளிக்கூடத்தில் பணிபுரிய கல்வித்துறை உத்தரவிடவேண்டும். ‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’ என்பார்கள். இந்திய சமுதாயம் எப்போதுமே ஆசிரியர்களை உச்சபீடத்தில் வைத்து உச்சிமுகர்ந்து இருக்கிறது. அவர்களை தாங்கள் வணங்கும் தெய்வங்களின் வரிசையில் வைத்து போற்றிருக்கிறது. ‘ஆண்டவனும், ஆசானும் என் வீட்டுக்கு ஒன்றாக வந்தால், நான் ஆசானையே முதலில் வரவேற்பேன்’ என்றார் 15–ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயநல்லிணக்க துறவி கபீர்.

எத்தனையோ பணிகள் இருந்தாலும், இரண்டு பணிகளை மட்டும் தெய்வீக பணிகள் என்று கூறுகிறோம். ஒன்று மருத்துவப்பணி, மற்றொன்று ஆசிரியர் பணி. மருத்துவப்பணி ஒருவரை பிணமாகாமல் காப்பாற்றுகிறது. ஆசிரியர் பணி நடைபிணமாகாமல் காக்கிறது என்கிறார் இறையன்பு. கல்வி கசப்பாவதும், கற்கண்டாவதும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களைப் பொருத்தே அமைகிறது. எல்லா ஆசிரியர்களுமே இன்சொல்லோடும், பரிவோடும் கற்றுத்தரும் சூழலை மட்டும் உருவாக்கிவிட்டால், கல்வி என்னும் காட்டாறு அனைத்துப்பள்ளங்களையும் நிரப்பி கட்டாந்தரைகளையும் சோலைகளாக ஆக்கிவிடும். தன்னிடம் படிக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் அன்பைப்பெற்ற ஆசிரியர் பகவானின் இந்தசெயல், எல்லா ஆசிரியர்களாலும் பின்பற்றப்படவேண்டிய செயலாகும். மாணவர்கள் அனைவருமே விருட்சமாகும் விதைகள்தான். அவர்கள் வளர்வதற்கு கல்வி மட்டுமல்ல, கற்றுத்தருபவரின் நேசமும் முக்கியம். அந்தவகையில், ஒருபக்கம் கற்றுக்கொடுக்கும் ஆற்றல், மறுபக்கம் மாணவர்கள்மீது கொண்ட அன்பு. இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஆசிரியர் பகவான்போல, ஆற்றலையும், குணநலன்களையும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயம் பெறவேண்டும். ஒரு பகவான் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகவான்களாக மிளிரவேண்டும்.


Next Story