லோக் ஆயுக்தாவுக்கு இன்னும் அதிகாரம் தேவை


லோக் ஆயுக்தாவுக்கு இன்னும் அதிகாரம் தேவை
x
தினத்தந்தி 11 July 2018 9:30 PM GMT (Updated: 11 July 2018 1:34 PM GMT)

பாராளுமன்றத்தில் 2013–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, மத்திய அரசு ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் 2013–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, மத்திய அரசு ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித்தலைவர் இல்லை என்ற காரணத்தால், தாமதப்பட்டுக் கொண்டு வருகிறது. லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர், மத்திய–மந்திரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கமுடியும். பெரும்பான்மையான மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலுங்கானா, திரிபுரா, அருணாசலபிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில்தான் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாமல் இருந்தது. 

இந்தநிலையில், தமிழகத்தில் ஜூலை 10–ந்தேதிக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 9–ந்தேதி முடிவடையும் கடைசிநேரத்தில், தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டது. இதன் தலைவர் ஐகோர்ட்டு நீதிபதியாகவோ, ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ, ஊழல்தடுப்பு கொள்கையில், பொதுநிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதி மற்றும் சட்டத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவோ இருக்கவேண்டும். மேலும் 2 நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவர்னரால் நியமிக்கப்படுவார்கள். அவர்களை, முதல்–அமைச்சரை தலைவராகவும், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரை உறுப்பினர்களாகவும் கொண்ட தெரிவுக்குழு பரிந்துரைக்கவேண்டும். 

 இந்தச்சட்டத்தின் கீழ், முதல்–அமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பொது ஊழியர்களான மாநிலஅரசு ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, ஊழலுக்கு தூண்டிவிடுதல், லஞ்சம் அளித்தல், லஞ்சம் பெறுதல், ஊழல் சர்ச்சைகளில் ஈடுபடுதல் மற்றும் அவர்களின் நடத்தை மற்றும் செயல்கள் எதையும் விசாரிக்க முடியும். இந்தப்புகார்கள் 4 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். 30 நாட்களுக்குள் புகாரை விசாரணை செய்து முடிக்கவேண்டும். இப்படி பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், சில குறைபாடுகளும் கூறப்படுகின்றன. லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதிதான் நியமிக்கப்பட வேண்டும் என்றில்லை. ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைக்கூட நியமிக்க வாய்ப்பு இருக்கிறது. பொது ஊழியருக்கு எதிராக பொய்புகார் அளிப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகைசெய்கிறது. பொதுவாக நீதிமன்றத்திலே போலீசார் தொடரும் எல்லா வழக்குகளிலும் தண்டனை கிடைத்துவிடுவதில்லை. அதுபோல, லோக் ஆயுக்தாவில் கொடுக்கும் எல்லா புகார்களிலும் விசாரணைக்குப்பிறகு தண்டனை பெறமுடியாது. நிரூபிக்க முடியவில்லை என்பதாலேயே பொய்புகார் ஆகிவிடமுடியாது. இந்தப்பிரிவு புகார் கொடுப்பவர்களை அச்சத்திற்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளிவிடும். அரசின் ஒப்பந்தப்பணி, டெண்டர் அறிவிப்பு, பரிசுப்பொருட்கள், வெகுமதிகள் வாங்குதல், பொதுஊழியர்களின் பணிநியமனம் போன்ற எதையும் விசாரிக்கமுடியாது. பணத்திற்கு பதில் பரிசுப்பொருட்களை லஞ்சமாக வழங்கிவிட்டால் அது இந்த சட்டவரம்புக்குள் வராது. இப்படி பலகுறைபாடுகள் இருப்பதால், அடுத்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடர்களில் இதற்கெல்லாம் திருத்தம் கொண்டுவந்து, நல்ல வலுவுள்ள சட்டமாக லோக் ஆயுக்தா சட்டத்தை உருவாக்கி, ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

Next Story