யாருடன் யார் இருப்பார்கள்?


யாருடன் யார் இருப்பார்கள்?
x
தினத்தந்தி 22 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-22T22:36:13+05:30)

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் கூட்டணிகளை உருவாக்க மும்முரமாக இறங்கிவிட்டனர்.

டுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் கூட்டணிகளை உருவாக்க மும்முரமாக இறங்கிவிட்டனர். இந்தநிலையில், திடீரென்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்துவிட்டது. இந்த தீர்மானத்தை கொண்டுவந்தது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சிதான், இதோடு நாடாளுமன்றத்தில் 27 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 24 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் தோல்வியுற்று, அரசுக்கு சாதகமாகவே முடிந்துள்ளன. 1990–ல் வி.பி.சிங், 1997–ல் தேவேகவுடா, 1999–ல் வாஜ்பாய் ஆட்சிக்காலங்களில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் வெற்றிபெற்றதால் பதவி இழந்தனர். முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் 1963–ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கடைசியாக 2003–ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தநேரத்தில் 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்தார். ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்ற அவர்களின் மாநில பிரச்சினைக்காகவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். 

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நள்ளிரவு வரை 12 மணி நேரம் விவாதம் நடந்தது. ராகுல்காந்தி 50 நிமிடங்களும், பிரதமர் மோடி 90 நிமிடங்களும் பேசினர். மொத்தம் 39 உறுப்பினர்கள் பேசினர். பிரதமர் மோடியும் சரி, ராகுல்காந்தியும் சரி, தங்கள் உரையை 2019–தேர்தலை முன்வைத்து பேசியது போலத்தான் தெரிந்தது. நள்ளிரவில் 11–10 மணிக்கு நடந்த ஓட்டெடுப்பில், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக 325 உறுப்பினர்களும், ஆதரவாக 126 பேரும் ஓட்டளித்து அரசுக்கு மகத்தான வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 22 நாட்களாக தமிழக எம்.பி.க்கள் போராடிய நேரத்தில், எந்த எதிர்க்கட்சியும் துணையாக நிற்கவில்லை என்ற காரணத்துக்காக அ.தி.மு.க. ஓட்டெடுப்பில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டளித்துவிட்டது. இதற்கான விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மீது கடும்கண்டன குரல்களோடு சாடினார். ஆனால், பேசிமுடித்தவுடன் மோடி இடத்துக்குச்சென்று அவரை ஆரத்தழுவியது நாடாளுமன்ற மரபுக்கு மீறியசெயல் என்றாலும், நல்லெண்ணத்தோடு செய்திருந்தால் வரவேற்று இருக்கலாம். ஆனால், அதற்குப்பிறகு தன் இடத்துக்கு வந்தவுடன் பக்கத்திலுள்ள உறுப்பினர்களைப் பார்த்து கண் அடித்ததுதான் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 

எல்லா கட்சிகளுக்குமே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெறாது என்று நன்றாகவே தெரியும். ஒரு பாத்திரத்தில் உள்ள வெந்நீர் எவ்வளவு சூடாக இருக்கிறது என்று விரலால் தொட்டுப்பார்ப்பதுபோல, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு துணையாக எந்தக்கட்சிகள் இருக்கின்றன?, காங்கிரசுக்கு ஆதரவாக எந்தக்கட்சிகள் இருக்கின்றன? என்று ஓரளவுக்கு கணக்குப்போட இந்த ஓட்டெடுப்பு உதவியது. இதுமட்டுமல்லாமல், அரசாங்கத்துக்கு எதிரான தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகளுக்கும், தங்கள் சாதனைகளை பறைசாற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கவும் பிரதமருக்கும், பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

Next Story