சத்துணவில் தடையில்லாமல் முட்டை


சத்துணவில் தடையில்லாமல் முட்டை
x
தினத்தந்தி 27 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-27T18:41:16+05:30)

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திட்டங்கள் கொண்டுவந்திருந்தாலும், இப்போது மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவர் பெயர் சொல்லும் திட்டம் ‘சத்துணவுத்திட்டம்’ ஆகும்.

றைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திட்டங்கள் கொண்டுவந்திருந்தாலும், இப்போது மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவர் பெயர் சொல்லும் திட்டம் ‘சத்துணவுத்திட்டம்’ ஆகும். சமூகவளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வி கற்றலுக்கு பசி இடையூறாக இருக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, தானும் இளம்வயதில் பசிக்கொடுமையை அனுபவித்தவன் என்பதாலும், அந்த கொடுமை தமிழ்நாட்டில் உள்ள வேறெந்த குழந்தைக்கும் வரக்கூடாது என்று கூறி, 10–7–1982–ம் ஆண்டு மாணவர் களுக்கு சத்துணவுத்திட்டத்தை கொண்டுவந்தார். அந்தநேரத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பாப்பாக் குறிச்சி என்ற ஊரில் தமிழர் தந்தை அமரர் 

சி.பா.ஆதித்தனார் நினைவாக அவர் மகனான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் கட்டிக்கொடுத்த முதல் சத்துணவுக்கூடத்தை எம்.ஜி.ஆர். நேரில் சென்று திறந்துவைத்தார். 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, கருணாநிதி ஆட்சிக்கு வந்தநேரத்தில் சத்துணவு, சத்தான உணவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்   சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவந்தார். தற்போது வாரத்தில் 5 நாட்களும் சத்துணவோடு முட்டை வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது ஏறத்தாழ 50 லட்சம் குழந்தைகள் தினமும் சத்துணவோடு முட்டை சாப்பிட்டு வருகிறார்கள். சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மாநிலம் தழுவிய அளவிலும், தொடர்ந்து மாவட்ட வாரியாக மாதந்தோறும் டெண்டர் விடப்பட்டது. இதனால் அந்தந்த மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் டெண்டர் எடுத்து முட்டை சப்ளை செய்ததால், சிறிய அளவில் கோழி வளர்ப்பவர்களுக்கும் பெரும்பயன் ஏற்பட்டது. மீண்டும் 2012–ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவில் டெண்டர் விடப்பட்டு, அந்த டெண்டரை எடுக்கும் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யும் வகையில் நடைமுறை செயலில் இருக்கிறது. 

தற்போது சப்ளை செய்துவரும் டெண்டர் இந்த மாதம் 31–ந்தேதியோடு முடிவடைகிறது. ஆகஸ்டு 1–ந் தேதியில் இருந்து புதிய டெண்டர் மூலமாகத்தான் சப்ளை செய்ய முடியும். இவ்வளவு ஆண்டுகளாக சமீபத்தில் வருமானவரி சோதனைக்குட்பட்ட கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம்தான் முட்டை சப்ளை செய்துகொண்டிருந்தது. புது டெண்டரில் கிறிஸ்டி நிறுவனத்தின் 3 நிறுவனங்கள் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால் அரசு விதித்த நிபந்தனைகளை முழுமையாக எந்த நிறுவனமும் பூர்த்தி செய்யாததால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டு புதிதாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் திறக்கும் தேதி அடுத்தமாதம் 24–ந்தேதி ஆகும். ஆனால் அதற்குள் 1–ந்தேதி முதல் யார் முட்டை சப்ளை செய்யப் போகிறார்கள்?, இப்போது சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம்தான் தொடர்ந்து சப்ளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுமா? என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அல்லது மீண்டும் மாவட்ட வாரியாக கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்தே மாதந்தோறும் முட்டை சப்ளை செய்யப்போகும் நிலைமை தொடங்கப் போகிறதா? என்பதும் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசு எந்த முடிவெடுத்தாலும், 50 லட்சம் குழந்தைகளுக்கும் ஒரு நாள்கூட தடையில்லாமல் 31–ந்தேதி டெண்டர் முடிந்தாலும், வேறு ஏற்பாடுகளை அரசு செய்து சத்துணவில் முட்டை வழங்கவேண்டும். சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் எப்போதும் முட்டையோடுதான் சாப்பிடவேண்டும். 

Next Story