காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்


காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2018 10:30 PM GMT (Updated: 2018-08-15T17:39:54+05:30)

ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் வறண்டுபோய் விளையாட்டு மைதானம்போல இருக்கும் காவிரியில், மழைகாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கடலில்போய் வீணாக கலக்கிறது.

எல்லா ஆறுகளிலும் தடுப்பு அணைகள் கட்டுங்கள், கதவணைகள் கட்டுங்கள் என்று ஒருபக்கம் கோரிக்கை எழுந்துள்ளநிலையில், நதிகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்றினால் வறண்ட மாவட்டங்கள் வளம்பெறும் என்ற கோரிக்கையும் ஆண்டுதோறும் மழைகாலங்களில் சொல்லப்படுவதும், பிறகு மறந்துவிடுவதுமாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே கங்கையையும்–காவிரியையும் இணைக்கவேண்டும் என்ற பேச்சு இருந்தது.

1999 முதல் 2004 வரை ஆட்சிபுரிந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முழுமூச்சுடன் தொடங்கினார். ஆனால் அவர் ஆட்சிக்காலத்துக்கு பிறகு இது தொடரவில்லை. சரி இந்திய நதிகளை இணைக்க முடியாவிட்டாலும், தென்னக நதிகளையாவது இணைக்கலாம் என்று பேசப்படுகிறது, பேசப்படுகிறது, பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்திய நதிகள் இணைப்பு, தென்னக நதிகள் இணைப்பு என்பது உடனடியாக நடக்காது. ஏனெனில், கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள் தங்களிடம் உபரிநீர் இருப்பதாக ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டாலும் அரசியல் காரணங்களுக்காக அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கத்தயாராக இல்லை. மேலும் இந்த உபரிநீர் கிடைப்பது தமிழ்நாட்டுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருகிறது. அப்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து தண்ணீர் தேவை குறைவாகிவிடுகிறது. இந்தநிலையில், தமிழக நதிகளையாவது இணைக்கலாம் என்ற கருத்து இப்போது வெளிவருகிறது. காவிரியில் மழைகாலங்களில் சராசரியாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போதெல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 101 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில்போய் கலக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காவிரி நதியை, வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டம் ரூ.3 ஆயிரத்து 290 கோடியில் நிறைவேற்றலாம் என்று 2008–ல் திட்டமிடப்பட்டது. இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களிலுள்ள 8 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும். இந்தத்திட்டத்திற்காக முதல்கட்டமாக 2008–ம்ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ரூ.234 கோடியில் மாயனூர் கதவணை அமைக்கும் பணிகள் தொடங்கி, 2014–ம்ஆண்டு ஜூன் மாதம் 25–ந்தேதி திறக்கப்பட்டது. இந்த அணைமூலம் 1.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கமுடியும். அதன்பிறகு இந்த பணிகளை தொடரவில்லை. தமிழக அரசு இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறது. மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இந்தத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி–குண்டாறு இணைப்பை செயல்படுத்தினால் நிச்சயமாக வளம் சேர்க்கும்.

Next Story