62 தடுப்பணைகள்


62 தடுப்பணைகள்
x
தினத்தந்தி 23 Aug 2018 10:00 PM GMT (Updated: 23 Aug 2018 12:52 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழக ஆறுகளில் தாமிரபரணி ஒன்றுதான் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கடலில் கலக்கிறது.

மிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழக ஆறுகளில் தாமிரபரணி ஒன்றுதான் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கடலில் கலக்கிறது. மற்ற ஆறுகள் அனைத்தும் கர்நாடகத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் வரும் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. மழைகாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, அந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீரோடு, நமது மழைதண்ணீரும் சேர்ந்து ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சரியான நீர்மேலாண்மை இல்லாமல், ஆங்காங்குள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் தண்ணீரை சேர்த்துவைக்க வாய்க்கால்கள் இல்லாததால் கடலில் போய் வீணாக கலக்கிறது. 

நமக்கு தேவை அதிகரிக்கும் நேரத்தில் இப்படி கடலில் வீணாகப்போய் கலக்கிறதே, ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டினால் தண்ணீரும் நிற்கும், அருகிலுள்ள நிலத்தடி நீரும் உயருமே என்று வெகு காலமாகவே மக்கள் குரல் எழுப்பி வந்தனர். இப்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக பெய்த நேரத்தில் அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பி திறந்துவிடப்பட்டதால், மேட்டூர் அணை கடந்த சிலநாட்களில் 2 முறை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லை. அங்குள்ள விவசாயிகள் வடிக்கும் கண்ணீர்தான் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, காவிரிநீர் 100 டி.எம்.சி.க்கு மேல் கடலில் போய் வீணாக கலந்துவிட்டது. இதுபோல, தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கடலில் போய் கலந்துகொண்டிருக்கிறது. 

தடுப்பணைகள் கட்டுவதுபற்றி ஒரு நல்ல அறிவிப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இப்படி தமிழ்நாடு முழுவதும் பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்கவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழுவினர் 3 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு, அந்தக்குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வுசெய்து, ஆய்வறிக்கையை இன்னும் ஒருசில மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள் சமர்ப்பித்தவுடன், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, பொழிகின்ற மழைநீர் முழுவதும் தேக்கிவைக்கப்படும். அதுமட்டுமல்ல, மழைநீர் முழுவதும் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காக 3 ஆண்டுகால திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்டமாக இந்த ஆண்டு ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், 62 தடுப்பணைகள் போதாது. ஆந்திராவில் பாலாற்றில் மட்டும் 28 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆறுகளிலும் இன்னும் அதிகமாக தடுப்பணைகள் கட்டவேண்டும். தடுப்பணைகளின் உயரம் 1 முதல் 3 அடிதான். ஆனால் கதவணைகள் 10 முதல் 12 அடி உயரம் கொண்டு மதகுகளுடன் கட்டப்படும். எனவே, எல்லா இடங்களிலும் கதவணைகள் கட்ட முடியாது. வாய்ப்புள்ள இடங்களில் கதவணைகளும் கட்டினால்தான் அதிலிருந்து வாய்க்கால்களில் பாய்ந்துசெல்ல உதவியாக இருக்கும். அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்ப வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படவேண்டும். குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று, இந்த பணிகளையெல்லாம் ஓரிரு மாதங்களில் அனைத்து இடங்களிலும் தொடங்கி விரைவாக முடிக்கவேண்டும்.

Next Story