சரியும் ரூபாய் மதிப்பு


சரியும் ரூபாய் மதிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2018 10:00 PM GMT (Updated: 27 Aug 2018 5:07 PM GMT)

இந்தியாவின் பணமான ரூபாயின் மதிப்பை, அமெரிக்கா டாலரின் மதிப்பை அடிப்படையாக வைத்துத்தான் நிர்ணயிக்க முடியும். அதாவது, ஒரு டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு எவ்வளவு என்பதை பொருத்துத்தான் ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், அமெரிக்கா டாலரின் மதிப்பும், இந்திய ரூபாயின் மதிப்பும் சமமாக இருந்தது. அதாவது ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய்தான். சில ஆண்டுகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பணமதிப்பு பலவீனமாக்கப்பட்டது. அப்போது தொடங்கிய பணமதிப்பு குறைப்பு தொடர்ந்து பல்வேறு சர்வதேச பிரச்சினைகளால் பணமதிப்பு சரியத்தொடங்கியது. நேற்று ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு ரூ.70.13 ஆக இருந்தது. ‘‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்’’! என்ற கிராமிய பழமொழிபடி, துருக்கிநாட்டு பொருளாதாரநிலை மிகவும் பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக துருக்கியின் பணமான ‘லிரா’, அமெரிக்கா டாலருக்கு இணையான தன் மதிப்பில் 40 சதவீதம் இழந்திருப்பது, இந்திய ரொக்கமான ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து அமெரிக்காவின் இறக்குமதியை பெருவாரியாக குறைக்கவேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகவரியை விதித்தார். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரிஉயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனா இதை வெகுசாதூர்யமாக சமாளித்தது. உடனடியாக தன்னுடைய கரன்சியான யுவானின் மதிப்பை குறைத்தது. அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீனாவை கதிகலங்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தநிலையில், துருக்கி மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையும், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு அதிகவரி விதித்ததும், துருக்கி ‘லிரா’வை அதிகம் பாதித்தது.

இந்தியா, துருக்கியிலிருந்து பல பொருட்களை இறக்குமதி செய்யும்நிலையில், ‘லிரா’ மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் அத்தகைய பொருட்களின் விலைகளெல்லாம் உயர்ந்துவிட்டது. ‘லிரா’ மதிப்பு குறைந்துள்ளதால், இந்தியாவுக்கு ஓரளவிற்கு பாதிப்பு ஏற்படுமே தவிர, பெரியபாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கெல்லாம் கூடுதல் விலை கிடைக்கும். இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு இழப்பினால் விலைவாசி ஏறாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. உடனடியாக இறக்குமதியை குறைக்கவேண்டும். விவசாய உற்பத்தி உள்பட அனைத்து உற்பத்திகளையும் உயர்த்துவதற்கு மிகத்தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இந்தியாவில் அதிகமாக இருக்கும் உற்பத்தி செலவை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இறக்குமதிகளுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.வரி போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஏற்றுமதிக்கு அதிகம் ஊக்கமளிக்கவேண்டும். மொத்தத்தில், மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களால் மட்டுமே இப்போதுள்ள நிலைமையை சமாளிக்கமுடியும். 2007–2008 உலக பொருளாதார நெருக்கடியையே சமாளித்த இந்தியா, இந்த நெருக்கடியையும் சமாளிக்கும்.

Next Story