பத்திரப்பதிவு துறை எடுத்த நல்ல முடிவு


பத்திரப்பதிவு துறை எடுத்த நல்ல முடிவு
x
தினத்தந்தி 16 Sep 2018 10:30 PM GMT (Updated: 2018-09-16T17:56:46+05:30)

தமிழக அரசு நிர்வாகத்தில் உள்ள துறைகளில் ஒருசில துறைகள் மிகவும் பழமைவாய்ந்த துறைகளாகும். அதில் மிகமுக்கியமான துறை பத்திரப்பதிவு துறையாகும்.

 நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1864–ம் ஆண்டே பத்திரப்பதிவு துறை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. 2017–18 நிதி ஆண்டில் 22 லட்சத்து 11 ஆயிரம் ஆவணங்களை பதிவுசெய்து, ரூ.9 ஆயிரத்து 121 கோடியே 53 லட்சம் வருவாயை பத்திரப்பதிவு துறை ஈட்டித்தந்துள்ளது. நமது மாநிலத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்த அலுவலகங்களில்தான் விற்பனை, பாகப்பிரிவினை, அடமானம், தானம், செட்டில்மெண்ட், உரிமையை விட்டுக்கொடுத்தல், கடனை திருப்பிக் கட்டுவதற்கான ரசீது வழங்குதல், திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் உள்பட பல்வேறு பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரு நாளைக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக எந்தவொரு ஆவணமும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்போது, அதை எழுதிக்கொடுப்பவர்களும், பெற்றுக் கொள்பவர்களும் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும். அடையாளத்துக்காக ஆதார் அட்டை நகல் தாக்கல் செய்வது தற்போது விருப்ப அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர, அந்த பத்திரத்தில் 2 சாட்சிகள் கையெழுத்திடவேண்டும். இது எதற்கு என்றால், விற்பவர், வாங்குபவர் என்ற இருதரப்பினரையும் நன்கு தெரிந்தவர்கள் என்றவகையில், அந்த சாட்சிகளின் கையெழுத்து தேவைப்படுகிறது.

தற்போது கடந்த சில ஆண்டுகளாக 12 இலக்கு எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94 சதவீதம்பேர் ஆதார் அட்டை வாங்கிவிட்டநிலையில், பத்திரப்பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சாட்சிகளுக்கு பதிலாக இருதரப்பும் விருப்பப்பட்டால் அவர்கள் ஆதார் அட்டையை தாக்கல் செய்யலாம். இதுமட்டுமல்லாமல், அவர்கள் கை விரல்ரேகையை பதிவு செய்யவேண்டும். இதை ஆதார் வழங்கும் இந்திய தனி அடையாள ஆணையத்தின் சர்வரோடு இணைத்து, அதில் உறுதிசெய்து அதனடிப்படையில் பத்திரம் வழங்குவதற்கான திட்டம் அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதில் ஆதார் அட்டை தாக்கல் செய்வதோ, விரல்ரேகையை பதிவு செய்வதோ இருதரப்பினரின் முழுசம்மதத்துடன் பெறப்படும். ஒருவேளை பதிவு செய்பவர்கள் எங்கள் விரல்ரேகையை பதிவு செய்யவேண்டியதில்லை என்று சம்மதம் தெரிவிக்காவிட்டால், பழைய முறைப்படி சாட்சிகள் 2 கையெழுத்துகளின் அடிப்படையிலேயே பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சார்பதிவாளர் அலுவலகங்களில் நான் முதலிலேயே விண்ணப்பித்திருந்தேன், எனக்கு பிறகு வந்தவர்களுக்கெல்லாம் முதலில் பதிவு செய்துவிட்டார்கள் என்ற புகார்கள் இனிமேல் வராமல் தடுப்பதற்காக தற்போது 51 சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை முறையாக இயங்கும் ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் அடிப்படையிலான பத்திரப்பதிவு இன்று முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலமாக யார்–யார் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்?. அவர்கள் எத்தனை மணிக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்? என்ற நேரம் எல்லாம் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வரிசையில் செய்யப்படும் நடைமுறை அமலுக்கு வருகிறது. பத்திரப்பதிவுகளை மிகவும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையோடும் நடைமுறைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இரண்டு முறைகளும் நிச்சயமாக வரவேற்புக்குரியது. தேவையான ஒன்று.


Next Story