சர்ச்சைக்குள்ளான ரபேல் போர் விமான ஒப்பந்தம்


சர்ச்சைக்குள்ளான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
x
தினத்தந்தி 24 Sep 2018 9:30 PM GMT (Updated: 2018-09-24T22:44:54+05:30)

ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு என்ற புகார் எந்த ஆட்சிவந்தாலும் ஏற்பட்டு வருகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராஜீவ்காந்தி மீது போபர்ஸ் பீரங்கி ஊழல்புகார் கூறப்பட்டது. இப்போது நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் 4 ஆண்டு ஆட்சியை முடித்தநிலையில், இதுவரையில் பெரியளவில் எந்த ஊழல்புகாரும் சொல்லப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்கள் இருக்கும் நிலையில், இப்போது ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல்புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2012–ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரபேல் போர்விமானங்கள் வாங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியாகும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

இப்போது கடந்த 2015–ம்ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து, 2016–ம் ஆண்டு அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஒரு விமானத்தின் விலை ரூ.1,611 கோடி வருகிறது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தில் விமானத்தின் விலை மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் அதை தயாரிப்பதற்கான பணியாளர்களின் ஊதியம், அதிலுள்ள ஆயுதங்கள், பராமரிப்பு, பயிற்சி போன்றவற்றையெல்லாம் சேர்க்கவில்லை. அதையெல்லாம் சேர்த்திருந்தால் இந்த விலைக்கும் அதிகமாக வந்திருக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது. 

இதுமட்டுமல்லாமல், இந்த ஒப்பந்தத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டப்படி, 50 சதவீத உற்பத்தி இந்தியாவில்தான் இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இப்போது பெரிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. போதாக்குறைக்கு பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, உதிரிபாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசுதான் சிபாரிசு செய்தது. வேறு நிறுவனத்தை கூட்டாளியாக சேர்க்க எங்களுக்கு தேர்வு எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் பிரான்ஸ் நாடு, இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அது டசால்ட் நிறுவனத்தின் முடிவுதான் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதேபோல, இந்திய அரசாங்கமும் தனக்கு இதில் பங்கில்லை, அது டசால்ட் நிறுவனத்தின் வணிக முடிவு என்று மறுத்துவிட்டது. இப்போது இது பெரியசர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நிச்சயமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ரபேல் போர்விமான ஒப்பந்த புகார்தான் பெரியளவில் வெடிக்கும். எனவே, மத்திய அரசாங்கத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ஏதாவது முறைகேடு நடந்திருக்கிறதா? என்பதை தகுந்த ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி நிரூபிக்கவேண்டும். அதுபோல, இந்த ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை தெளிவாக்கும் வகையில், மத்திய அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும். தேவைப்பட்டால் நாடாளுமன்ற இணைகுழு விசாரணைக்குக்கூட தயங்கக்கூடாது.

Next Story