நடைபாதையில் நடக்கவிடுங்கள்


நடைபாதையில் நடக்கவிடுங்கள்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:00 PM GMT (Updated: 1 Oct 2018 4:53 PM GMT)

கடந்த சில ஆண்டுகளாகவே சாலைவிபத்துகள், விபத்துகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்த வர்களின் எண்ணிக்கைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்துகொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம்கூட சமயபுரம் அருகே அதிகாலை 4 மணியளவில் நின்றுகொண்டிருந்த ஒரு லாரிமீது கார்மோதியதில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி எல்லோருடைய நெஞ்சையும் பதைபதைக்க செய்கிறது. இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய விபத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், சாலையில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் சாவுகளை பொருத்தமட்டில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதிலும் 20,457 பாதசாரிகள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 56 பாதசாரிகள் மரணத்தை தழுவுகிறார்கள். இந்தியாவிலேயே இந்தப்புள்ளி விவரத்தில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 3,507 பாதசாரிகள் சாலைவிபத்து களில் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக இருக்கும் மராட்டியத்தில்கூட 1,831 பேரும், அதற்கு அடுத்த இடத்திலுள்ள ஆந்திராவில் 1,379 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆக, சாலை விபத்து களில் பலியாகும் பாதசாரிகள் சாவு மற்ற எல்லா மாநிலங்களையும்விட தமிழ்நாட்டில்தான் மிக அதிக மாக இருக்கின்றது. இதேபோல், இருசக்கர வாகனங்கள் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஒரே ஆண்டில் 6,329 பேர் தமிழ்நாட்டில் இருசக்கர வாகன விபத்துகளில் பலியாகியிருக்கிறார்கள். ஆக தமிழ் நாட்டில், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதில் தமிழக அரசும், காவல்துறையும், போக்குவரத்துறையும் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

பாதசாரிகள் விபத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நடை பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கின்றன. சில இடங்களில் பஸ் நிறுத்தங்கள் இருக்கின்றன. சில இடங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்தி ருக்கிறார்கள். நடைபாதைகளும் சரியான பராமரிப்புகள் இல்லாமல் மேடும் பள்ளமும், குண்டும்குழியுமாக இருக்கின்றன. கட்சிக்கொடிகள், பேனர்கள், நடைபாதைகளில் கட்டப்படுவதும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் நடைபாதைகளில் நடக்கமுடியாமல், சாலைகளில் நடக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் நடைபாதை ஓரமாக மோட்டார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. ஆக இதையெல்லாம் தாண்டி நடைபாதையில் நடக்கவேண்டியவர்கள், வாகனங்கள் செல்லவேண்டிய சாலையில் நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். இதுதான் பாதசாரிகள் அதிகளவில் விபத்துக்குள்ளாவதற்கான காரணமாகிறது. இருசக்கர விபத்துகளை எடுத்துக் கொண்டால், ஹெல்மெட் போடுவது அவசியம் என்று விதிகள் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில்கூட சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகள், எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்சு இருசக்கர வாகனங்களில் செல் பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்து வதில் அரசு போதியளவு அக்கறை காட்டவில்லை என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே, உடனடியாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நடைபாதையில் வேறெந்த ஆக்கிரமிப்புகளும் இருக்கக்கூடாது. அனுமதிக்கப்படாத இடங்களில் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படவேண்டும். ஹெல்மெட் அணிவது இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். பாதசாரிகளும் நடைபாதையில்தான் நடக்கவேண்டும். குறிப்பிட்ட இடத்தில்தான் சாலையை கடக்கவேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவேண்டும். அத்தகைய விழிப்புணர்வு களையும் ஏற்படுத்தவேண்டும்.

Next Story