விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு


விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 3 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-03T19:16:06+05:30)

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். விவசாயம் தழைத்தால்தான் நாடு தழைக்கும்.

ந்தியா ஒரு விவசாய நாடு. மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். விவசாயம் தழைத்தால்தான் நாடு தழைக்கும். விவசாயிகளின் வாழ்வு மலர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் செழிக்கும். ஆனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு ஊட்டும் விவசாயியின் வாழ்வில் வறுமைதான் தாண்டவமாடுகிறது. இவ்வளவு நாட்களும் வாயில்லா பூச்சிகளாக இருந்த விவசாயிகள் இப்போது தங்கள் கோரிக்கைகளுக்காக போராட வீதிக்கு வர தொடங்கிவிட்டனர்.

அந்தவகையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பாரதிய கிசான் யூனியன் (திகாயத் பிரிவு) என்ற விவசாய சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 23–ந்தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்தனர். விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலான டிராக்டர் உள்பட டீசல் வாகனங்களை டெல்லியில் தடை செய்ய வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தனியார் விவசாய நிலங்களிலும் செயல்படுத்த வேண்டும், விவசாய உபகரணங்கள் மீது விதிக்கப்படும் சரக்கு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், அனைத்து விளை பொருட்களுக்கும் பயிர் காப்பீட்டு இன்சூரன்சு வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், ஆழ்குழாய் கிணறுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத பென்‌ஷன் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 21 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடந்தது.

ஆனால் டெல்லிக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. உத்தரபிரதேசம்–டெல்லி எல்லைப்பகுதியான காஜியாபாத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி, தண்ணீரை பீச்சி அடித்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு என்று விவசாயிகள் மீது தேவையற்ற நடவடிக்கை பாய்ந்தது. இதில் இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது. அகிம்சையை போதித்து அதன்படி நடந்து காட்டிய காந்தி பிறந்த நாளன்று நடந்த இந்த சம்பவம் நிச்சயமாக ஒரு கரும்புள்ளிதான். தொடர்ந்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டில் விவசாய சங்க பிரதிநிதிகளோடு நடந்த பேச்சுவார்த்தையில் 7 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை. இப்போது இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுக்க தொடங்கிவிட்டன. இது விவசாயிகளுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் உள்ள பிரச்சினை. இதில் அரசியல் நுழையக்கூடாது. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் போராட்டம் வரை செல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளும் தங்கள் போராட்டம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் விவசாயிகள் இரவில் பேரணி சென்றதை ஒரு முன்மாதிரியாகவும் கொண்டு நடத்த வேண்டும்.

Next Story