தலையங்கம்

அமெரிக்காவுக்கு அஞ்சாத இந்தியா + "||" + India does not fear America

அமெரிக்காவுக்கு அஞ்சாத இந்தியா

அமெரிக்காவுக்கு அஞ்சாத இந்தியா
‘நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்’ என்று திருநாவுக்கரசர் எழுதிய ஒரு பாடல் உண்டு. அதன் பொருள், ‘நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல, எமனுக்கும் பயப்படமாட்டோம்’ என்பதுதான்.
இந்த பாடலின் உட்பொருளைத்தான் பிரதமர் நரேந்திர மோடி அரசு உலகத்துக்கு பறைசாற்றி வருகிறது. டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து உலகமே தன் சொல்படிதான் இயங்க வேண்டும் என்ற நிலையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஈரான் நாட்டின் மீது வருகிற நவம்பர் 4–ந்தேதி முதல் பொருளாதார தடை விதிக்கப்போவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, ஈரான் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மிக கடுமையான நடவடிக்கைகளை எதிர்நோக்கவேண்டும் என்றநிலையில் ஏற்கனவே அச்சுறுத்தி உள்ளது. இந்த பொருளாதார தடை ஈரானுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், ஈரானின் முக்கிய ஏற்றுமதி பொருளான கச்சா எண்ணெயை நம்பி இந்தியா போன்ற நாடுகள் பெரிதும் இருக்கின்றன. 

அணு ஆயுத உற்பத்தி தடை தொடர்பாக 2015–ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாககூறி, இந்த பொருளாதார தடையை அமல்படுத்தப்போவதாக அமெரிக்கா பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் 3–வது இடத்தில் இருக்கிறது. எனவே, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை இந்தியாவால் நிச்சயமாக அமல்படுத்த முடியாது. இந்தநிலையில், ஈரான் நாட்டிலிருந்து அடுத்த மாதம் 90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானோடு, இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு இருக்கின்றன. இதில் பெரிய லாபம் என்னவென்றால், இதுவரையில் ஐரோப்பிய வங்கிகள் வழியாக யூரோ மூலம் இந்த எண்ணெய் வாங்கப்பட்டுள்ளநிலையில், இப்போது ரூபாய் மூலமாக வர்த்தகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்க்காக இந்தியா கொடுக்கும் ரூபாயை, இந்தியாவில் இருந்து உணவு தானியங்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை வாங்கி தங்கள் நாட்டில் இறக்குமதி செய்வதற்கு ஈரான் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரானில் மட்டும் இந்தியா புறக்கணிக்கவில்லை. 

ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை மீறி, இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து ரூ.40,300 கோடி அளவுக்கு எஸ்.400 ரக ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்தியா வந்திருந்த ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ரஷியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்குவது உள்பட 8 ஒப்பந்தங்களில் இந்தியாவும்–ரஷியாவும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்புக்கு எஸ்.400 ரக ஏவுகணைகள் மிக பயன்தரும் ஒன்றாகும். 400 கி.மீட்டர் தூரத்திலிருந்து எதிரி போர் விமானங்கள் வரும்போது இந்த ஏவுகணையால் அதை தாக்கமுடியும். இந்த ஏவுகணையை கனரக வாகனங்களுடன் இணைக்க முடியும் என்பதால், எந்த இடத்துக்கும் எளிதில் கொண்டு சென்று 32 இலக்குகளை குறிவைத்து 72 ஏவுகணைகளை செலுத்த முடியும். அமெரிக்கா மீட்டும் இசைக்கு எல்லாம், நடனம் ஆடாமல் பிரதமர் மோடி மிகதுணிச்சலாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனையும் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்ள வைக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. எட்டாக்கனியாகும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை
உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பார்கள். அதுபோன்ற நிலையில் சாதாரண ஏழை–எளிய மக்கள் இப்போது பெட்ரோல்– டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரும் எட்டாக்கனியாகி விட்டது.
2. நடைபாதையில் நடக்கவிடுங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே சாலைவிபத்துகள், விபத்துகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்த வர்களின் எண்ணிக்கைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்துகொண்டிருக்கிறது.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது.
4. திருமண பரிசான பெட்ரோல்
பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாதவகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பணமதிப்பு சரிவு, மற்றொருபக்கம் பெட்ரோல்–டீசல் விலை உயர்வு ஆகியவற்றின் தாக்கத்தால் பொருட்களின் விலையும் தினமும் ஏறிக்கொண்டே போகிறது.
5. குழப்பம் தீரவேண்டும்
பிளஸ்-2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் ஒவ்வொருவரின் எதிர்காலத்தையுமே நிர்ணயிக்கிறது.