வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்


வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 5:21 PM GMT)

ரிசர்வ் வங்கியில் முன்பு கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். உலகளாவிய பொருளாதார நிபுணர்.

ரிசர்வ் வங்கியில் முன்பு கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். உலகளாவிய பொருளாதார நிபுணர். 2013–ம் ஆண்டு அவர் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றவுடனேயே, இந்திய ரூபாய் மதிப்பு 2.1 சதவீதம் உயர்ந்தது. அடுத்த மாதத்திலேயே பணவீக்கம் 9.8 சதவீதத்திலிருந்து 3.78 சதவீதமாக குறைந்தது. இதனால் விலைவாசி குறைந்தது. 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கி பதவிகாலத்தை முடித்த அவருக்கு பதவிகாலம் நீட்டிக்கப்படவேண்டும் என்று பொதுவான கோரிக்கை எழுந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் அவருக்கு கொடுக்கவில்லை. ரூபாய் பணமதிப்பிழப்பு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு அவருடன் மத்திய அரசாங்கம் ஆலோசனை நடத்திய நேரத்தில், ரிசர்வ் வங்கி அதை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பல எதிர்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தும் மத்திய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுராம் ராஜன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் இந்திய எதிர்காலம் குறித்து பேசும்போது, 2012–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டுவரை இந்திய பொருளாதாரம் மிகவேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. ஆனால் ரூபாய் பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவைவரியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. உலக பொருளாதாரம் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்துகொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் வேலைதேடி வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், நாம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, இந்த வளர்ச்சி போதாது என்று கூறியிருக்கிறார்.

 இது நிதர்சனமான உண்மையாகும். சமீபத்தில் அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள நீடித்த வேலைவாய்ப்பு மையம் நடத்திய ஆய்வில், படித்தவர்களிடையே 16 சதவீதம் வேலையில்லாதிண்டாட்டம் இருக்கிறது என்றும், வேலைவாய்ப்புகள் சுருங்கியிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிகஅதிகமாக இருக்கிறது. இந்த மாதம் தமிழக வனத்துறையில் 300 பாரஸ்டர் என்று கூறப்படும் வனவர் பணிக்கும், 878 பாரஸ்டு கார்டுகள் என்று கூறப்படும் வனகாவலர் பணிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கு 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுபோல, கடந்த 11–ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசில் குரூப்–2 பணிகளில் 1,199 பணிகளுக்கான தேர்வு, 2,268 மையங்களில் நடந்தது. இதற்கு 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும். ஒரு பதவிக்கு ஏறத்தாழ 500 பேர் போட்டியிடும் நிலையில், ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு 499 பேர் மீண்டும் வேலையில்லாதோர் பட்டியலுக்கு போய்விடுவார்கள். தொடர்ந்து ஆண்டுதோறும் படித்து முடித்து ஏராளமானவர்கள் வெளியே வேலை தேடிவரும் நேரத்தில், இனி போட்டிகள் பலமாகவே இருக்கும். ரகுராம் ராஜன் எச்சரிக்கை மணி அடித்துவிட்டார். உடனடியாக மத்திய–மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அரசு பணிகளிலேயே வேலைவாய்ப்புகளைக் கொடுத்துவிடமுடியாது. தனியார் பங்களிப்புதான் கைகொடுக்கும். எனவே, தனியார் நிறைய தொழில்களை தொடங்க ஊக்கம் அளிக்கவேண்டும். பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கு தடையாக இருக்கும் தடைக்கற்கள் அகற்றப்படவேண்டும்.

Next Story