லஞ்சம்–ஊழலை ஒழிக்க வேண்டும்


லஞ்சம்–ஊழலை ஒழிக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 5:16 PM GMT)

நாடு மகாத்மா காந்தியின் 150–வது ஆண்டுவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியா என்றாலே கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை போராட்டங்களின் மூலமாக மகாத்மா காந்தி வாங்கிக்கொடுத்த ‘விடுதலை’ என்பதை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

நாடு மகாத்மா காந்தியின் 150–வது ஆண்டுவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியா என்றாலே கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை போராட்டங்களின் மூலமாக மகாத்மா காந்தி வாங்கிக்கொடுத்த ‘விடுதலை’ என்பதை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியோடு வாழ்ந்த, அவரோடு தொடர்புகொண்ட வகையில் இப்போது வாழ்பவர் அவரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய 97 வயதான வி.கல்யாணம் மட்டும்தான். இன்றைக்கும் காந்தியவாதியாகவே சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று காந்தி கண்ட கனவையெல்லாம் நன்கு அறிந்தவர் பெரியவர் வி.கல்யாணம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் தபால் தலை கண்காட்சியை திறந்து வைக்கும்போது, நாட்டில் நிலவும், பெருக்கெடுத்து ஓடும் லஞ்சம்–ஊழலை பற்றி தன் வேதனையை கொட்டித்தீர்த்துவிட்டார். தற்போதைய ஆட்சியாளர்களைவிட, ஆங்கிலேய அரசாங்கமே மேல். இப்போதைய நிலைமையைவிட, ஆங்கிலேயர் ஆட்சியைதான் விரும்புகிறேன். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் காந்தி கண்ட கனவுப்படி ஒரு நல்ல நிர்வாகத்தைத்தர தவறிவிட்டார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் லஞ்சம்–ஊழல் இல்லை. பலநேரங்களில் காந்தியே ஆங்கிலேயர்களின் சிறந்த நிர்வாகத்தை பாராட்டி இருக்கிறார் என்று மிகவும் நொந்துபோய் பேசியிருக்கிறார். 

தற்போதைய சூழ்நிலையில், அனைத்து மட்டங்களிலும் லஞ்சம்–ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு நல்ல நிர்வாகத்தில் மக்களுக்கு அடையவேண்டிய தேவைகள், திட்டங்களின் பலன்கள் ஆகியவற்றை கெடுப்பது லஞ்சம்–ஊழல்தான். எப்படி காந்தியின் தனிச்செயலாளர் கல்யாணம் ஆங்கிலேயர் ஆட்சியில் லஞ்சம்–ஊழல் இல்லை என்று கூறுகிறாரோ அதுபோல, நெருக்கடிநிலை பிரகடனத்தின்போது அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டது என்றுகூறி, அதை இருண்டகாலம் என்று சொன்னாலும், அந்த காலக்கட்டங்களில் அரசு நிர்வாகங்களில் லஞ்சம் இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது. காரணம் லஞ்சம் வாங்கினால் அல்லது லஞ்சம் கொடுத்தால் அடுத்த நிமிடமே சிறைச்சாலை கம்பிகளை எண்ணவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற அச்சஉணர்வு எல்லோரிடமும் இருந்தது. அதுபோன்ற ஒருநிலைமை இப்போது உருவாகவேண்டும். 

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 4 ஆண்டுகளாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வெற்றி பெற்றுள்ளார். சுற்றுப்புறங்கள் தூய்மையில் அவர் காட்டும் அக்கறையைபோல, மத்திய–மாநில அரசுகள் அடுத்த நடவடிக்கையாக நிர்வாகத்தில் தூய்மையை கொண்டுவர லஞ்சம்–ஊழலை அடியோடு ஒழிக்கவேண்டும். பொதுவாழ்க்கையில் தூய்மை, அரசு பணிகளில் தூய்மை என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் நியமனங்கள், இடம்மாறுதல்கள் மொத்தத்தில் நிர்வாகத்தில் லஞ்சம் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது. மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தவுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளை நேர்மையும், திறமையும் கொண்ட அதிகாரிகள், நேர்மையும், திறமையின்மையும் கொண்ட அதிகாரிகள், நேர்மையின்மையும், திறமையும் கொண்ட அதிகாரிகள், நேர்மையின்மையும், திறமையின்மையும் கொண்ட அதிகாரிகள் என்று 4 பிரிவுகளாக பிரித்து, அதற்கேற்ற வகையில் பணி நியமனங்களை ஒதுக்கீடு செய்தார். ஒருதுறையின் தலைமை நேர்மையாகவும், திறமையாகவும் இருந்தால், கடைநிலை ஊழியர்வரை எதிரொலிக்கும் என்பது அவரது கருத்து. அதேபோன்ற நிலைமையை மத்திய–மாநில அரசுகள் உருவாக்கி, அனைத்து மட்டங்களிலும் லஞ்சம்–ஊழலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story